EN
Local

எல்-நினோ சவால்களை எதிர்கொள்ள உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு ஆலோசனை

எதிர்காலத்தில் உலகளவில் ஏற்படக்கூடிய எல்-நினோ காலநிலை தாக்கத்தால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் கூட்டம் நேற்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்த மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், எல்-நினோ நிலைமையால் விவசாயத் துறைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

எதிர்வரும் சிறுபோகப் பருவத்திற்குத் தேவையான நீரை நீர்த்தேக்கங்களில் சேமித்து வைப்பது, குடிநீர் வளங்களைப் பாதுகாப்பது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்களது பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் வசந்த சமரசிங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், இவ்விடயம் தொடர்பாக விரிவான கலந்துரையாடலுக்காக உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் விசேட கூட்டமொன்றை எதிர்வரும் நாட்களில் நடத்த தீர்மானிக்கப்பட்டது. எல்-நினோ தாக்கங்களை எதிர்கொள்ளும் செயற்திட்டங்களைத் தயாரித்து சமர்ப்பிக்குமாறு கமத்தொழில் அமைச்சு, கமத்தொழில் திணைக்களம், மகாவலி அதிகாரசபை, நீர்ப்பாசனத் திணைக்களம் உள்ளிட்ட தொடர்புடைய நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டித்வா சூறாவளி மற்றும் மத்திய கிழக்கு பிராந்திய மோதல்களால் ஏற்பட்ட சவால்களை வெற்றிகரமாக கையாள்ந்ததைப் போலவே, இந்த உலகளாவிய காலநிலைச் சவாலையும் எதிர்கொள்வதற்கான திட்டங்கள் தயாராக உள்ளதாக அமைச்சர்கள் தெரிவித்தனர். அரசாங்கம் இந்த விடயத்தில் விசேட கவனம் செலுத்தி வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இயற்கை அனர்த்தங்களை முன்கூட்டியே துல்லியமாக கணிக்க முடியாது என்பதால், எந்தவொரு அவசர சூழ்நிலையையும் சமாளிக்க முன்னெச்சரிக்கை திட்டங்கள் அவசியம் என அமைச்சர் வசந்த சமரசிங்க வலியுறுத்தினார்.

இக்கூட்டத்தில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார, சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன, வளிமண்டலவியல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் ஏ.எல்.கே. விஜேமான்னகே, கமத்தொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டபிள்யூ.ஏ.ஆர்.டி. விக்ரமஆரச்சி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Related Articles

Back to top button