“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டின் கீழ் போதைப்பொருள் ஒழிப்புக்கான இளைஞர் மாநாடு நடத்த திட்டம்

போதைப்பொருள் அபாயத்தை நாட்டிலிருந்து வேரோடு ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டுக்கு இணையாக, போதைப்பொருள் ஒழிப்பை மையமாகக் கொண்ட இளைஞர் மாநாட்டொன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான முதற்கட்ட ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் வியாழக்கிழமை (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இம்மாநாடு, இளந்தலைமுறையினரை போதைப்பொருள் பயன்பாட்டிலிருந்து பாதுகாப்பதுடன், போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிராக நாட்டின் இளைஞர்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் கிராமிய மட்டத்தில் இளைஞர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போதைப் பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்துடன் இணைந்து, ஜூன் 26ஆம் திகதி இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இதனை தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு, பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சு இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
ஆய்வு அறிக்கைகளின்படி, போதைப்பொருள் பயன்பாடு காரணமாக நாட்டின் இளந்தலைமுறையினர் சமூக, பொருளாதார மற்றும் சுகாதார ரீதியாக கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக 20 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலை நாட்டின் உழைக்கும் படையின் உற்பத்தித்திறனிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனையடுத்து, போதைப்பொருள் அபாயத்தை முழுமையாக ஒழித்து, இளைஞர்களை மீட்பதற்கான முக்கிய அரசாங்க வேலைத்திட்டமாக “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்தக் கலந்துரையாடலின் போது, போதைப்பொருள் ஒழிப்புக்கான இளைஞர் மாநாட்டின் திட்டங்கள் மற்றும் ஆரம்ப கட்ட ஒழுங்கமைப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அருண பண்டார, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஊடக ஆலோசகர் சந்தன சூரியபண்டார, அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் சுபுன் விஜேரத்ன உள்ளிட்ட பலரும், முப்படைகள் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.




