EN
Local

அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வி வாய்ப்புகளை வழங்க அரசாங்கம் உறுதி

குருநாகல்: எந்தவித பாகுபாடுமின்றி அனைத்து பிள்ளைகளுக்கும் புதிய உலகின் வாய்ப்புகளை அடைய வழிவகுத்து, அவர்களின் கனவுகளை நோக்கி நம்பிக்கையுடன் பயணிக்கக்கூடிய சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

குருநாகல் மாவட்டத்தில் மேற்கொண்ட கல்விசார் கண்காணிப்பு விஜயத்தின் போது, புனித பெர்ணடெட் மாதிரி மகா வித்தியாலயம் பாடசாலையின் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நிகழ்வில் கல்வி மற்றும் இணைப்பாட நடவடிக்கைகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பிரதமர் பரிசில்களை வழங்கினார். மேலும், பாடசாலையின் உத்தியோகபூர்வ இதழான “ஆதர்ஷ பிரபா” சஞ்சிகையையும் வெளியிட்டு வைத்தார்.

தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், மாணவர்களையும் ஆசிரியர்களையும் நேரில் சந்திக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பமும் நாட்டின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.

“மகிழ்ச்சியுடனும், அன்பும், பாதுகாப்பும் நிறைந்த சூழலில் குழந்தைகள் கல்வி கற்கும் பாடசாலைகளையே நாம் உருவாக்க விரும்புகிறோம்” என அவர் தெரிவித்தார்.

நாடு தற்போது பொருளாதார சவால்கள் மற்றும் உலகளாவிய காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர், அவற்றை சமாளிக்க அனைவரும் கூட்டுப்பொறுப்புடன் செயல்பட வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார்.

கல்வித்துறையில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார். பாடத்திட்ட மேம்பாடு, மனிதவள அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்தல் மற்றும் புதிய உலகிற்குத் தேவையான திறன்களை மாணவர்களுக்கு வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் அவற்றில் அடங்கும் என தெரிவித்தார்.

அனைத்து மாணவர்களும் எதிர்கால வாய்ப்புகளை சமமாகப் பெற வேண்டும் என்பதுடன், தங்களது கனவுகளை நனவாக்கும் நம்பிக்கையையும் உருவாக்குவதே அரசாங்கத்தின் இலக்காக இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.

மேலும், கல்வி நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையில் டிஜிட்டல் மயமாக்கலை விரிவுபடுத்துவதோடு, புதிய பாடங்களை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். அதேவேளை, ஆசிரியர் பயிற்சி முறைமையை மேலும் வலுப்படுத்துவதன் மூலம் மாணவர்களுக்கு தரமான கல்வி வாய்ப்புகளை வழங்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் புனித பெர்ணடெட் மாதிரி ஆரம்பப் பாடசாலை மற்றும் கஜநெக்கம மகா வித்தியாலயம் ஆகிய கல்வி நிலையங்களுக்கும் விஜயம் மேற்கொண்டார். அங்கு ஆசிரியர்களுடன் கலந்துரையாடிய அவர், பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் மாணவர்களின் கல்விக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர்களின் சேவையைப் பாராட்டினார்.

கல்வித் துறையில் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தி, எதிர்கால தலைமுறைக்கு தரமான கல்வியையும் சமமான வாய்ப்புகளையும் வழங்குவதில் அரசாங்கம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படும் என பிரதமர் உறுதியளித்தார்.

Related Articles

Back to top button