அமெரிக்காவில் இலங்கை பௌத்த பிக்கு ஒருவர் கைது

இலங்கையைச் சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவர் அமெரிக்காவில் பாலியல் சேவை தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செய்திகளின்படி, மசசூசெட்ஸ் மாநிலத்தில் உள்ள Tufts University பல்கலைக்கழகத்தில் பௌத்த மதகுருவாக பணியாற்றி வந்த 32 வயதுடைய மஹாயாயே வினீத தேரர், பொஸ்டன் பொலிஸாரின் இரகசிய நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் மேலும் ஆறு ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மஹாயாயே வினீத தேரர் 2024 டிசம்பர் மாதம் முதல் டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் பௌத்த மதகுருவாகவும் மாணவர்களுக்கான ஆன்மீக ஆலோசகராகவும் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
பொஸ்டனில் நடைபெறவுள்ள சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளுக்கு முன்னதாக, மனிதக் கடத்தல் மற்றும் வணிக ரீதியிலான பாலியல் தொழிலை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸார் “Operation Red Card” என்ற பெயரில் விசேட இரகசிய நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
அந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பாலியல் தொழிலாளர்களாக நடித்த இரகசிய பொலிஸ் அதிகாரிகள் இணையத்தில் வெளியிட்ட விளம்பரத்திற்கு மஹாயாயே வினீத தேரர் பதிலளித்ததாக பொலிஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், பல்வேறு பாலியல் சேவைகளை கோரியதோடு, அதற்காக 125 முதல் 400 அமெரிக்க டொலர்கள் வரை வழங்கத் தயாராக இருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பொஸ்டனில் அமைந்துள்ள Moxy Boston Downtown Hotel-இல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, தேரர் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் இன்னும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மஹாயாயே வினீத தேரர், தன்மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் அமெரிக்க அதிகாரிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




