2026–2030 தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டம் வெளியீடு

இலங்கை பொருளாதாரத்தில் புதிய திருப்புமுனையை குறிக்கும் வகையில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான 2026–2030 தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டம் (NEDP) நேற்று (16) கொழும்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்வு தொழில் மற்றும் தொழில்முனைவர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
2025 பட்ஜெட் முன்மொழிவுகளின் அடிப்படையில் அரசாங்கக் கொள்கைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம், நாட்டின் ஏற்றுமதி துறையை வலுப்படுத்தி, ஏற்றுமதி அடிப்படையிலான நிலைத்த பொருளாதார வளர்ச்சியை அடைவதை நோக்கமாகக் கொண்ட முக்கிய தேசிய திட்டமாகும்.
தொழில் மற்றும் தொழில்முனைவர் அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி வாரியத்தின் (EDB) தலைமையிலும், ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) வழங்கிய தொழில்நுட்ப உதவியுடனும் இந்த மூலோபாயத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
அரசாங்க நிறுவனங்கள், தனியார் துறை பங்குதாரர்கள் மற்றும் சர்வதேச வளர்ச்சி கூட்டாளர்களுடன் மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆலோசனைகளின் அடிப்படையில் இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் ஏற்றுமதி பல்வகைப்படுத்தலை ஊக்குவிக்க ஆறு குறுக்கு துறைகள் (Horizontals) மற்றும் எட்டு முக்கிய ஏற்றுமதி துறைகள் (Verticals) அடையாளம் காணப்பட்டுள்ளன.
அரசின் “பொஹொசத் ரடக் – லஸ்ஸன ஜீவிதயக்” தேசிய பார்வைக்கு இணங்க உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம் மூலம், 2030 ஆம் ஆண்டுக்குள் இலங்கையின் ஏற்றுமதி வருவாயை 36 பில்லியன் அமெரிக்க டாலர் இலக்கை அடைய திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையை பிராந்திய மற்றும் உலக சந்தைகளுக்கு சேவை வழங்கும் போட்டித் திறன் மிக்க, அறிவு மற்றும் விநியோக சங்கிலி அடிப்படையிலான ஏற்றுமதி மையமாக மாற்றுவது இந்த திட்டத்தின் முக்கிய இலக்காகும்.
இந்த நிகழ்வில் தொழில் மற்றும் பொருளாதார அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், இலங்கை மத்திய வங்கி ஆளுநர் ஆர். நந்தலால் வீரசிங்க, ஏற்றுமதி அபிவிருத்தி வாரிய தலைவர் மங்கள விஜேசிங்க, ADB நிர்வாக இயக்குனர் ஷானன் கவ்லின், அரச அதிகாரிகள், பொருளாதார நிபுணர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் தனியார் துறை பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




