EN
Local

யாழ்ப்பாணம் நாகவிகாரையில் வெசாக் வலயம் வைபவ ரீதியாக திறந்து வைப்பு

யாழ்ப்பாணம் நாகவிகாரைச் சூழலில் இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வெசாக் வலயம், வெசாக் தினமான மே 30, 2026 அன்று மின்விளக்கு அலங்காரங்கள் ஒளிரச் செய்யப்பட்டு மக்கள் பார்வைக்காக வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் கலந்து கொண்டிருந்த அதிதிகள் வெசாக் கூடுகள் மற்றும் மின்விளக்கு அலங்காரங்களை ஒளிரச் செய்து வெசாக் வலய நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தன்சல் (இலவச உணவு வழங்கும்) நிகழ்வும் அதிதிகளால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நாகவிகாரையில் நடைபெற்ற இந்த விசேட நிகழ்வில், நாகவிகாரையின் விகாராதிபதி மீஹாஹ ஜந்துறே ஸ்ரீவிமல தேரர் உள்ளிட்ட மதத் தலைவர்கள், வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் கொன்சுலர் ஜெனரல் சாய் முரளி, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் மற்றும் பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும், யாழ்ப்பாண மாவட்டக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் K.J.N.M.P.K. பிரியந்த நவரத்ன, வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் புத்திக்க சிறிவர்தன, வட பிராந்தியக் கடற்படை கட்டளைத் தளபதி, பலாலி விமானப்படைத் தள கட்டளை அதிகாரி, யாழ்ப்பாண பிரதேச செயலாளர், யாழ்ப்பாண போதனா மருத்துவமனை பணிப்பாளர் மற்றும் யாழ்ப்பாண மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்டோரும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, வெசாக் அலங்காரப் போட்டிகளில் சிறந்த வடிவமைப்புகளுக்காக முதல் மூன்று இடங்களைப் பெற்ற இராணுவப் படைப்பிரிவுகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அதேவேளை, பல்வேறு வடிவங்களில் அலங்கரிக்கப்பட்ட வெசாக் கூடுகள் மற்றும் ஒளியலங்காரங்களை பார்வையிட பெருமளவான மக்கள் ஆர்வத்துடன் வருகை தந்து வருகின்றனர்.

Related Articles

Back to top button