EN
Local

அரச துறையின் டிஜிட்டல் மாற்றத்திற்காக PIC-Net வேலைத்திட்டம் அறிமுகம்

அரசின் டிஜிட்டல் பொருளாதாரத் திட்டத்தின் முக்கிய அங்கமாக, அரச துறையில் நிறுவன ரீதியிலான டிஜிட்டல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக “Public Impact Champions Network (PIC-Net)” என்ற புதிய வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அரச துறையின் வினைத்திறனை மேம்படுத்தி, பொதுமக்களுக்கு உயர்தரமான சேவைகளை வழங்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இது தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்கள பணிப்பாளர் நாயகங்கள், ஆணையாளர் நாயகங்கள், அரச கூட்டுத்தாபனங்கள், சட்டபூர்வ சபைகள் மற்றும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் தலைவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

PIC-Net வேலைத்திட்டத்தின் கீழ், தெரிவு செய்யப்படும் ஒவ்வொரு அரச நிறுவனத்திலும் முழு பணியாளர்களிலிருந்து நான்கு முன்னோடிகள் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்படும். டிஜிட்டல் யுகத்திற்கேற்ற சேவை வழங்கல், தொழில்நுட்ப பயன்பாடு, செயல்முறை திறன் மற்றும் நிறுவன மாற்றங்களை ஒருங்கிணைந்த முறையில் மேம்படுத்துவது இவர்களின் பொறுப்பாகும்.

இந்த முன்னோடிகள் தங்களது நிறுவனங்களில் டிஜிட்டல் மாற்றத்திற்கான மைய சக்தியாக செயல்படுவார்கள். இத்திட்டத்தின் மூலம் அரச துறை முழுவதும் சுமார் 400 பேரைக் கொண்ட தேசிய அளவிலான டிஜிட்டல் மாற்ற முன்னோடி வலையமைப்பு உருவாக்கப்பட உள்ளது.

தேர்ந்தெடுக்கப்படும் முன்னோடிகளுக்கு டிஜிட்டல் மாற்றம், சேவை மறுவடிவமைப்பு, செயல்முறை மேம்பாடு மற்றும் மாற்ற முகாமைத்துவம் தொடர்பான நடைமுறைப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. மேலும் செயலமர்வுகள் மற்றும் நிபுணர் வழிகாட்டல்களும் ஏற்பாடு செய்யப்படும்.

இத்திட்டத்தின் கால எல்லையைத் தாண்டியும், இந்த முன்னோடிகள் தங்களது நிறுவனங்களில் டிஜிட்டல் மாற்றத்திற்கான மைய அதிகாரிகளாக தொடர்ந்து செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், நிறுவனங்களுக்கு இடையேயான அறிவு மற்றும் அனுபவ பகிர்வுகளுக்கும் அவர்கள் பங்களிப்பார்கள்.

இந்த வேலைத்திட்டத்திற்கான வழிகாட்டல் மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை ஜனாதிபதி செயலகம், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் GovTech Sri Lanka இணைந்து வழங்கவுள்ளன.

மேலும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆதரவுடன் முகாமைத்துவ ஆலோசகர்கள் நியமிக்கப்படவுள்ளதுடன், நிறுவனங்களால் முன்மொழியப்படும் முன்னோடி அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்கும் பணிகளிலும் அவர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள்.

Related Articles

Back to top button