EN
Local

காணாமல் போனோர் விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் – அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார

2009 ஆம் ஆண்டு உள்நாட்டு போர் முடிவடைந்திருந்தாலும், காணாமல் போனவர்கள் தொடர்பான பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமல் நீடித்து வருவதாகவும், இதற்குக் கடந்த அரசாங்கங்களின் அரசியல் அக்கறையின்மையே முக்கிய காரணம் எனவும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், கடந்த ஒரு ஆண்டுக்குள் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் செயல்பாடுகளை மீளச் சுறுசுறுப்பாக்குவதற்காக தேவையான பணியாளர்கள் நியமிக்கப்பட்டதுடன், போதுமான நிதி ஒதுக்கீடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

கடந்த கால அரசாங்கங்கள் இந்த விவகாரத்தில் போதிய அரசியல் விருப்பத்தை வெளிப்படுத்தாததால், பல ஆண்டுகளாக விசாரணைகள் நிறைவடையாமல் இருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார். “போர் 2009 இல் முடிவடைந்தது. ஆனால் காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைகள் இன்னும் தொடர்கின்றன என்றால், அந்த விசாரணைகளை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கம் முந்தைய அரசாங்கங்களுக்கு இருக்கவில்லை என்பதையே அது காட்டுகிறது” என அவர் தெரிவித்தார்.

முப்பது ஆண்டுகளாக நீடித்த போரின் விளைவாக வடக்கும் தெற்கும் பெரும் மனித மற்றும் பொருளாதார இழப்புகளை சந்தித்ததாக குறிப்பிட்ட அமைச்சர், இனி ஒருபோதும் நாட்டில் அத்தகைய சூழ்நிலை உருவாகக் கூடாது என்றார். அதற்காக நல்லிணக்கம், பரஸ்பர நம்பிக்கை மற்றும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்துவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், வடக்கு மக்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக காணி விடுவிப்பு நடவடிக்கைகள் மற்றும் மூடப்பட்டிருந்த வீதிகளை மீண்டும் திறக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். தமிழ் மக்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக கருதும் நிலைக்கு இனி இடமளிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தற்போதுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) நீக்கி, மக்கள் நலனை மையமாகக் கொண்ட புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

புதிய சட்டம் தனிநபர்களையோ சமூகங்களையோ ஒடுக்குவதற்காக அல்லாமல், உண்மையான பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக வடிவமைக்கப்படும் என்றும், அந்த சட்டமூலம் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.

Related Articles

Back to top button