மே 19 முதல் 22 வரை பாராளுமன்றம் கூடும்

எதிர்வரும் மே 19ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை இலங்கை பாராளுமன்றம் கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன தெரிவித்துள்ளார்.
அண்மையில் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
அதன்படி, பாராளுமன்றம் கூடும் அனைத்து நாட்களிலும் காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கும், 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விகளுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மே 19 – செவ்வாய்க்கிழமை
காலை 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை உண்ணாட்டரசிறை சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து மாலை 5.00 மணி முதல் 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரப் பிரேரணைக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மே 20 – புதன்கிழமை
காலை 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை அரசாங்கக் கட்சியினால் கொண்டுவரப்படும் இலங்கை மத்திய வங்கியின் 2025ஆம் ஆண்டுக்கான பொருளாதார மீளாய்வு அறிக்கை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் நடைபெறவுள்ளது.
மே 21 – வியாழக்கிழமை
காலை 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மற்றும் ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான ஒன்பது தீர்மானங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
மே 22 – வெள்ளிக்கிழமை
காலை 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான:
- திஸ்ஸ விதாரண
- எஸ். ஜீ. முதுகுமாரண
- சந்திரதாஸ கலப்பதி
- நந்தன குணதிலக
- ஜனக் மஹேந்திர அதிகாரி
- கனகசபை தம்மன்பிள்ளை
ஆகியோருக்கான அனுதாபப் பிரேரணை எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதனைத் தொடர்ந்து மாலை 5.00 மணி முதல் 5.30 மணி வரை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.




