EN
Local

வனவாசல அருகே புகையிரதம் தடம்புரண்டதால் 2 கோடி ரூபா நட்டம் – புகையிரத அதிகாரிகள் கவலை

வனவாசல புகையிரத நிலையத்துக்கு அருகில் இடம்பெற்ற புகையிரத தடம்புரள்வுச் சம்பவத்தால் புகையிரத திணைக்களத்துக்கு சுமார் 2 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத நிலைய அதிபர் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இந்த விபத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும், நீண்டகாலமாக புகையிரத பாதைகள் புனரமைக்கப்படாததாலேயே இவ்வாறான விபத்துகள் இடம்பெறுகின்றன என்ற கருத்தை ஏற்க முடியாது என்றும் கூறினார்.

மேலும், போதைப்பொருளுக்கு அடிமையான சிலர் புகையிரத தண்டவாளங்களில் பொருத்தப்பட்டுள்ள ஆணிகள் மற்றும் உலோகப் பகுதிகளை திருடி விற்பனை செய்வதை ஒரு தொழிலாக மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

களனி புகையிரத பாலம் அருகிலும் இதுபோன்ற ஆணிகள் திருடப்பட்ட சம்பவங்கள் முன்னரும் பதிவாகியிருந்ததாகவும், அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் புகையிரத திணைக்களம் பாதுகாப்பு பணிக்காக காவலாளி ஒருவரை நியமித்துள்ளதாகவும் கூறினார்.

புகையிரத பாதைகளில் பொருத்தப்பட்டுள்ள ஆணிகளை அகற்றுவது பாரிய விபத்துகளுக்கும் மனித உயிரிழப்புகளுக்கும் வழிவகுக்கும் அபாயகரமான செயல் என அவர் எச்சரித்தார்.

இவ்வாறான சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது புகையிரத நிலையத்திலோ தகவல் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த சம்பவம் நாட்டின் பொதுப் போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றச்செயல்கள் குறித்து மீண்டும் கவலைகளை எழுப்பியுள்ளது.

Related Articles

Back to top button