16 வயதுச் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகநபருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

கல்முனை பகுதியில் 16 வயதுச் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 25 வயதுடைய பிரதான சந்தேகநபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சம்பவம் கடந்த புதன்கிழமை (03) இரவு கல்முனை தலைமையகப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் மறுநாள் வியாழக்கிழமை (04) பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து கல்முனை தலைமையகப் பொலிஸாரின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு உள்ளிட்ட அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு பிரதான சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வெள்ளிக்கிழமை (05) கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளின்படி, பாதிக்கப்பட்ட சிறுமி சில மாதங்களுக்கு முன்பு தனது தாயாருடன் கல்முனையில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றிற்கு சென்றிருந்தார். அங்கு பணியாற்றிய சந்தேகநபருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், பின்னர் தொலைபேசி எண்கள் பரிமாறப்பட்டு சமூக வலைத்தளங்கள் ஊடாக தொடர்பு தொடரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ தினத்தில், சந்தேகநபர் வாடகை வேனில் மற்றொருவருடன் இணைந்து சிறுமியின் வீட்டிற்கு சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டிலிருந்து வெளியே வந்த சிறுமியை முகவரி கேட்பது போல் அழைத்து, பின்னர் பலவந்தமாக கடத்திச் சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின்னர் அம்பாறை மாவட்டத்தின் மற்றொரு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு வைத்து தாக்குதல் இடம்பெற்றதாகவும், அதன் பின்னர் சிறுமி அக்கரைப்பற்று பகுதியில் இறக்கிவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிறுமி பின்னர் பேருந்து உதவியுடன் கல்முனை பொலிஸ் நிலையத்தை அடைந்து முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட வேன் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், தலைமறைவாக உள்ள இரண்டாவது சந்தேகநபரை கைது செய்ய விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.
பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவரது தாயாரும் மன உளைச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




