வெசாக் பண்டிகையை முன்னிட்டு 15,000 க்கும் மேற்பட்ட தானசாலைகள் பதிவு – நாடு முழுவதும் வெசாக் தயாரிப்புகள் தீவிரம்

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 15,000 க்கும் அதிகமான தானசாலைகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தானசாலைகளை பதிவு செய்வதற்கான வாய்ப்பு இன்னும் உள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகுட தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் சில தொற்றுநோய்கள் பரவி வருவதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளதால், தான ஏற்பாட்டாளர்கள் முறையான சுகாதாரப் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் தோரணங்கள், வெசாக் கூடுகள் மற்றும் பல வெசாக் வலயங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பௌத்த மக்கள் வெசாக் பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் தயாராகி வருவதுடன், தங்கள் வீடுகளை வெசாக் கூடுகள் மற்றும் பல்வேறு அலங்காரப் பொருட்களால் அலங்கரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இம்முறை வெசாக் கூடுகள் உள்ளிட்ட அலங்காரப் பொருட்களின் விலைகள் ஓரளவு அதிகரித்திருந்தாலும், அவற்றின் விற்பனையில் குறிப்பிடத்தக்க உயர்வு காணப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.




