விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம்: 5 மற்றும் 6ஆம் கட்ட மீளாய்வுகள் குறித்து IMF இயக்குநர் சபை இன்று கூடுகிறது

International Monetary Fund இயக்குநர் சபை, இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டத்தின் 5ஆம் மற்றும் 6ஆம் கட்ட மீளாய்வுகள் தொடர்பாக எட்டப்பட்ட உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாட்டை பரிசீலிப்பதற்காக இன்று புதன்கிழமை (27) கூடவுள்ளது.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள இலங்கைக்கான IMF செயற்திட்டப் பிரதானி Evan Papageorgiou, கடந்த சில ஆண்டுகளில் இலங்கை பெரும்பாகப் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதிலும், வெளிநாட்டு நாணய கையிருப்புகளை வலுப்படுத்துவதிலும் மற்றும் சந்தை நம்பகத்தன்மையை மீளக் கட்டியெழுப்புவதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதிகாரிகளின் தொடர்ச்சியான முயற்சிகள் பொதுமக்கள், முதலீட்டாளர்கள் மற்றும் ஏனைய பங்குதாரர்கள் மத்தியில் நம்பிக்கையை அதிகரித்துள்ளதாகவும், அதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மேலும் ஸ்திரமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், அண்மைக்கால உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் இலங்கையின் பொருளாதாரத்தின் மீது புதிய அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும், கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் தற்போது இலங்கையின் கொள்கை சார்ந்த கட்டமைப்பு வலுவான மற்றும் முன்னேற்றமான நிலையில் இருப்பதாகவும் அவர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், Central Bank of Sri Lanka தெரிவித்துள்ளதாவது, IMF இயக்குநர் சபை ஒப்புதல் வழங்கும் பட்சத்தில் கிடைக்கும் நிதி உதவி நாட்டின் வெளிநாட்டு நாணய கையிருப்புகளை வலுவான நிலையில் பேண உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.




