EN
Local

லசந்த விக்ரமதுங்க கொலை: 17 ஆண்டுகளாகியும் நீதி இல்லை – லால் விக்ரமதுங்க குற்றச்சாட்டு

லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு 17 ஆண்டுகள் கடந்துள்ளபோதிலும், இதுவரை உரிய விசாரணைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இல்லை என அவரது சகோதரரும் The Sunday Leader பத்திரிகையின் இணை நிறுவனருமான லால் விக்ரமதுங்க கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இன்று (14) கொழும்பில் “லசந்தவுக்காக நாம்” அமைப்பின் சார்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு 17 ஆண்டுகள் கடந்தும் மக்களுக்கு தெரியும் வகையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றார். ஆனால், மோட்டார் சைக்கிளில் வந்து தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பது தங்களுக்கும், விசாரணை அதிகாரிகளுக்கும், கொலை செய்தவர்களுக்கும் தெரியும் எனக் கூறினார்.

இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததே மக்கள் மத்தியில் கோபம், சந்தேகம் மற்றும் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒரு வழக்கை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல சாட்சிகள் அவசியம் என்றாலும், இந்த வழக்கில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். காவல்துறையினர் விரும்பினால் இதைவிட சிக்கலான கொலைகளையும் சில நாட்களில் கண்டுபிடிக்க முடியும் என்றும், ஆனால் லசந்தவின் கொலை வழக்கில் அது நடைபெறவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.

மேலும், லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பாக இன்னும் நால்வர் உயிரிழந்துள்ளதாகவும், அதற்கான சாட்சிகள் இருந்தும் ஏன் வழக்குகள் தொடரப்படவில்லை என அவர் கேள்வி எழுப்பினார்.

ஒரு முன்னாள் பொலிஸ் மா அதிபர் சாட்சிகளை மாற்றியமைத்தது தெரிந்திருந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், லசந்த கொலை செய்யப்பட்டபோது அவரது நாட்குறிப்பை எடுத்துச் சென்ற முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு எதிராக ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இவ்வாறான வெளிப்படையான விடயங்களில் முதலில் வழக்குகள் தொடரப்பட்டால், பிரதான கொலை வழக்கிற்கான சாட்சிகள் மேலும் வலுப்பெறும் என்றும் அவர் கூறினார்.

அரசியல்வாதிகள் பொதுவாக இரண்டு விஷயங்களை மட்டுமே செய்கிறார்கள் என்றும், ஒன்று வாக்குகளைப் பெறுவது, மற்றொன்று தங்களது தீர்மானங்களால் வாக்குகள் குறையாமல் பாதுகாப்பது என்றும் அவர் விமர்சித்தார்.

கீத் நோயர் மீதான தாக்குதலும், பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவமும் இராணுவத்தின் ஒரு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டவை என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் எனவும் அவர் தெரிவித்தார்.

ஒரு நிறுவனத்தில் சிலர் தவறு செய்தால் அவர்களை நீக்கி நிறுவனத்தை பாதுகாப்பதே சரியான நடைமுறை என்றும், ஆனால் இலங்கையில் அவர்கள் “ரணவிருவோ” என அழைத்து பாதுகாக்கப்படுகிறார்கள் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

“காரணமின்றி கொலை செய்பவர்கள் ஒருபோதும் மாவீரர்களாக முடியாது. இதனை ஒரு தேசமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையெனில் இந்த நாடு ஒருபோதும் முன்னேற்றமடையாது” என்றும் அவர் வலியுறுத்தினார்.

லசந்த விக்ரமதுங்க சர்வதேச அளவில் ஒரு வீரராக மதிக்கப்படுகிறார் என்றும், ஆனால் அவரது சொந்த நாட்டிலேயே அவர் கொல்லப்பட்டதுடன் பத்திரிகை நிறுவனங்களும் எரிக்கப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை நேரில் சந்தித்தபோது, இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தனிப்பட்ட முறையில் உறுதியளித்ததாகவும், அந்த நம்பிக்கையிலேயே இன்னும் காத்திருக்கிறேன் என்றும் லால் விக்ரமதுங்க தெரிவித்தார்.

Related Articles

Back to top button