EN
Local

14 வயது இளம் பௌத்த பிக்கு துஷ்பிரயோக சம்பவம் – 41 வயது தேரர் கைது

14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை தொடர்ச்சியாக துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு தலைமறைவாக இருந்த 41 வயது பௌத்த தேரர் ஒருவர் மத்திய முகாம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் அம்பாறை மாவட்டம் மத்திய முகாம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுகந்த கம பகுதியில் அமைந்துள்ள விகாரையில் செவ்வாய்க்கிழமை (2) மாலை இடம்பெற்றுள்ளது.

விகாரையில் தங்கி இருந்த ஐந்து இளம் பிக்குகளுள் மூவர் அண்மையில் விகாரையை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, கிராம மக்கள் விகாரை முன் ஆர்ப்பாட்டம் நடத்த தயாரான நிலையிலேயே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதனிடையே, மீதமிருந்த இரு இளம் பிக்குகள் பொலிஸாரால் வாக்குமூலம் பெறுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். இதன் போது சந்தேக நபரான 41 வயது தேரர் தீகவாவி பகுதிக்குத் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் மற்றொரு பௌத்த பிக்குவின் உதவியுடன் அவர் தீகவாவி பகுதியில் இருந்து மத்திய முகாம் பொலிஸாரிடம் சரணடைந்ததைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்கிய இரு இளம் பிக்குகளுள், பாதிக்கப்பட்ட 14 வயது பிக்குவை மருத்துவ பரிசோதனைக்காக அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் அழைத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 41 வயது சந்தேக நபரை இன்று (3) அம்பாறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய முகாம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button