EN
Local

இலங்கையின் கடற்தொழில் துறைக்கு புதிய அபிவிருத்தித் திட்டங்கள் – ஜைக்கா தொழில்நுட்பக் குழு வரவிருக்கும் ஒப்புதல்

இலங்கையின் கடற்தொழில் துறையின் தேவைகள் மற்றும் முன்னுரிமை அடிப்படையில் புதிய அபிவிருத்தித் திட்டங்களை உருவாக்குவதற்காக தொழில்நுட்பக்குழுவொன்றை இலங்கைக்கு அனுப்ப ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவரகம் (JICA) ஒப்புதல் வழங்கியுள்ளது என கடற்தொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

டோக்கியோவில் நடைபெற்று வரும் தீவு நாடுகளின் சமுத்திர மாநாட்டில் பங்கேற்க ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர், அங்கு ஜைக்கா அதிகாரிகளுடன் சந்திப்பில் ஈடுபட்டிருந்தார்.

இலங்கையின் கடற்தொழில் துறையை நவீனமயமாக்கவும், இத்துறையின் நீண்டகால வளர்ச்சிக்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் உட்கட்டமைப்பு குறைபாடுகளை அடையாளம் கண்டு நிலையான தீர்வுகளை வழங்கவும் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க ஜைக்கா இணங்கியதாக அவர் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

அவரது வேண்டுகோளுக்கு அமைய, இலங்கையின் கடற்தொழில் துறையின் தேவைகள் மற்றும் முன்னுரிமைகளை அடிப்படையாகக் கொண்டு புதிய அபிவிருத்தித் திட்டங்களை உருவாக்குவதற்காக ஜைக்கா தொழில்நுட்பக்குழுவொன்றை இலங்கைக்கு அனுப்பவும் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், பல ஆண்டுகளாக சவால்களை எதிர்கொண்டுவரும் கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தின் பிரச்சினைகளுக்கு தொழில்நுட்ப மற்றும் அறிவியல் ரீதியான தீர்வுகளை வழங்குவது குறித்தும் இந்த சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button