EN
Local

கியூபாவுக்கு எதிரான அமெரிக்க நடவடிக்கைகளை முன்னிலை சோசலிசக் கட்சி கண்டனம்

கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி ரவுல் காஸ்ட்ரோ மீது அபத்தமான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதன் மூலம், வெனிசுவேலா ஜனாதிபதி கடத்தப்பட்டபோது பயன்படுத்தப்பட்ட அதே ஜனநாயக விரோத முறைகளை இப்போது கியூபாவிலும் அமெரிக்க ஏகாதிபத்திய ஆட்சி செயல்படுத்தத் தயாராகி வருவதாக முன்னிலை சோசலிசக் கட்சி தெரிவித்துள்ளது.

முன்னிலை சோசலிசக் கட்சியின் மத்திய செயற்குழுவினால் ஞாயிற்றுக்கிழமை (24) வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்தக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியம் கியூபாவுக்கு எதிராக அரசியல் குற்றச்சாட்டுகள், சட்ட அழுத்தங்கள் மற்றும் பிரச்சார நடவடிக்கைகள் மூலம் இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து வருவதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கியூபாவின் புரட்சிகரத் தலைமை மற்றும் அரச நிறுவனங்களை குறிவைப்பது, பல தசாப்தங்களாக தொடரும் அமெரிக்க விரோத நிலைப்பாடு, பொருளாதாரத் தடைகள் மற்றும் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் முயற்சிகளின் தொடர்ச்சியாகவே பார்க்கப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கை கூறுகிறது. அமெரிக்கா தலைமையிலான உலகளாவிய முதலாளித்துவ அமைப்பிற்கு வெளியே சுதந்திரமான வளர்ச்சிப் பாதையைத் தேர்ந்தெடுக்கும் நாடுகளை தண்டிக்கும் ஒரு நீண்டகால உத்தியின் பகுதியாக இவை உள்ளதாகவும் அது குற்றம்சாட்டுகிறது.

தலையீட்டுக் கொள்கைகளை நியாயப்படுத்துவதற்காக முன்வைக்கப்படும் ஒருதலைப்பட்சமான வரலாற்று விளக்கங்களையும் அரசியல் நோக்கமுள்ள குற்றச்சாட்டுகளையும் நிராகரிப்பதாகவும், இத்தகைய நடைமுறைகள் சர்வதேச சட்டத்தின் அடிப்படை கோட்பாடுகளான இறையாண்மை சமத்துவம், உள் விவகாரங்களில் தலையிடாமை மற்றும் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை மீறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க பொருளாதாரத் தடைகள் மற்றும் வெளிப்புற அழுத்தங்கள் இருந்தபோதிலும், கியூப புரட்சி தொடர்ந்து எதிர்ப்பின் சின்னமாக விளங்குவதாகவும், அதன் தலைமையை அவமதிக்கும் முயற்சிகள் கியூப மக்களின் அரசியல் உறுதியை உடைக்கும் முயற்சிகளாகவே இருப்பதாகவும் அறிக்கை கூறுகிறது.

கியூபாவின் இறையாண்மை மற்றும் மக்கள் தங்களது எதிர்காலத்தை தாங்களே தீர்மானிக்கும் உரிமையை பாதுகாக்கும் போராட்டத்தில் கியூப மக்களுக்கு முழுமையான ஆதரவு வழங்குவதாகவும் முன்னிலை சோசலிசக் கட்சி தெரிவித்துள்ளது.

மேலும் உலகளாவிய முற்போக்கு, சோசலிச மற்றும் ஜனநாயக இயக்கங்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார, அரசியல், இராணுவ மற்றும் சித்தாந்த தாக்குதல்களுக்கு எதிராக தங்களது எதிர்ப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும், அமைதி, சமத்துவம் மற்றும் சர்வதேச சோசலிசக் கொள்கைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button