
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும், “இயக்குநர் இமயம்” எனப் போற்றப்பட்ட பாரதிராஜா இன்று (10) அதிகாலை உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார். இறக்கும் போது அவருக்கு 84 வயதாகும்.
கடந்த சில நாட்களாக கடுமையான உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த பாரதிராஜா, சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்திய ஊடகங்களின் தகவலின்படி, 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தனது மகன் மனோஜ் பாரதிராஜா மாரடைப்பால் உயிரிழந்ததிலிருந்து, பாரதிராஜாவின் உடல்நிலையில் தொடர்ச்சியான பாதிப்புகள் ஏற்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
1977 ஆம் ஆண்டு வெளியான ‘16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, தமிழ் சினிமாவுக்கு புதிய பரிமாணத்தை உருவாக்கியவர் எனக் கருதப்படுகிறார். அன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் ஸ்டூடியோக்களுக்குள் மட்டுமே இருந்த திரைப்படக் காட்சிகளை, கிராமப்புறங்களின் இயற்கைச் சூழல், வயல்வெளிகள் மற்றும் மண் வாசனையுடன் திரையில் கொண்டு வந்தவர் என்ற பெருமை அவருக்குரியது.
‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘முதல் மரியாதை’, ‘கருத்தம்மா’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கிய அவர், தமிழ் சினிமாவின் வளர்ச்சியில் அழியாத தடம் பதித்துள்ளார்.
திரைப்படத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பை பாராட்டி, இந்திய மத்திய அரசு அவருக்கு ‘பத்மஸ்ரீ’ விருதை வழங்கி கௌரவித்தது. இதுதவிர பல தேசிய மற்றும் மாநில அளவிலான விருதுகளையும் பெற்றுள்ளார்.
பாரதிராஜாவின் மறைவுச் செய்தி தமிழ் திரையுலகினரையும், ரசிகர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அரசியல் தலைவர்கள், திரைப்பட பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் கிராமிய மண்வாசனையை உலகிற்கு அறிமுகப்படுத்திய பாரதிராஜாவின் மறைவு, திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது.



