இலங்கை மகளிர் ஏ – நியூஸிலாந்து மகளிர் ஏ போட்டி மழையால் கைவிடப்பட்டது

ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கு மைதானத்தில் வெள்ளிக்கிழமை (15) நடைபெற்ற இலங்கை மகளிர் ஏ அணிக்கும் நியூஸிலாந்து மகளிர் ஏ அணிக்கும் இடையிலான இரண்டாவது உத்தியோகப்பற்றற்ற மகளிர் சர்வதேச ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது.
இலங்கை மகளிர் ஏ அணி நிர்ணயித்த 198 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து மகளிர் ஏ அணி, 10.1 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 66 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை காரணமாக ஆட்டம் தடைப்பட்டது.
தொடர்ச்சியாக மழை பெய்ததால் போட்டியை மீண்டும் ஆரம்பிக்க முடியாமல் நடுவர்கள் போட்டியை கைவிட்டனர்.
நியூஸிலாந்து மகளிர் ஏ அணிக்காக பெல்லா ஜேம்ஸ் 20 ஓட்டங்களையும், கேட் அண்டர்சன் ஆட்டமிழக்காமல் 19 ஓட்டங்களையும், பெல்லா ஆம்ஸ்ட்ரோங் ஆட்டமிழக்காமல் 13 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை அணிக்காக ரஷ்மிக்கா செவ்வந்தி மற்றும் தாருக்கா ஷெஹானி தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் ஏ அணி 50 ஓவர்களில் 197 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.




