EN
International

நேட்டோ அமைப்பு எங்களுக்குத் தேவையில்லை: ட்ரம்ப் தெரிவிப்பு

“நேட்டோ அமைப்பு எங்களுக்குத் தேவையில்லை அவர்களுக்குத்தான் நாங்கள் தேவை” என டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

முன்னதாக, லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையில் 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமுலுக்கு வந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணை வழியாக அனைத்து நாடுகளின் வர்த்தக கப்பல்களும் செல்லலாம் என ஈரான் அரசு அறிவித்தது.

இதுகுறித்து அமெரிக்காவில் நடந்த நிகழ்வொன்றில் பேசிய டிரம்ப், “ஹோர்முஸ் நீரிணை விவகாரம் ஏறக்குறைய முடிந்துவிட்ட நிலையில், எங்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமா என்று கேட்டு, நேட்டோவிலிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு உங்கள் உதவி தேவைப்பட்டிருக்கும். ஆனால் இப்போது எனக்கு உங்கள் உதவி உண்மையிலேயே தேவையில்லை என்று அவர்களிடம் கூறினேன்.

ஏனென்றால் எங்களுக்குத் தேவைப்பட்டபோது, அவர்கள் முற்றிலும் பயனற்றவர்களாக இருந்தார்கள். ஆனால் உண்மையில், எங்களுக்கு அவர்கள் தேவைப்படவே இல்லை. அவர்களுக்குத்தான் நாங்கள் தேவைப்பட்டோம்” என்றார்.

இதனிடையே, ட்ரம்ப் வெளியிட்ட பதிவு ஒன்றில், “தற்போது ஹோர்முஸ் நீரிணையின் நிலைமை சரியாகிவிட்டது. எங்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமா என்று நேட்டோவிலிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அவர்களுடைய கப்பல்களில் எண்ணெய்யை ஏற்றுவதற்காக வரவில்லை என்றால், விலகி இருக்குமாறு கூறினேன். ஏனென்றால், எங்களுக்குத் தேவைப்பட்டபோது அவர்கள் பயனற்றவர்களாகவும் ஒரு காகிதப் புலியாகவும் இருந்தார்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

மற்றொரு பதிவில், “ சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் பெரும் வீரத்திற்கும் உதவிக்கும் நன்றி” எனப் பதிவிட்டிருந்தார்.

மேலும் தற்காலிக போர் நிறுத்தம் முடியும் வரையில் மட்டுமே “ஹோர்முஸ் நீரிணை வழியாக அனைத்து நாடுகளின் வர்த்தக கப்பல்களும் செல்லலாம்” என்ற இந்த விலக்கு அமுலில் இருக்கும் என ஈரான் ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button