EN
International

2009 விமான விபத்து: ஏர் பிரான்ஸ் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்கள் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு

2009ஆம் ஆண்டு இடம்பெற்ற ஏர் பிரான்ஸ் விமான விபத்தில் 228 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், பிரான்ஸ் நாட்டின் ஏர் பிரான்ஸ் விமான சேவை நிறுவனமும் ஏர்பஸ் விமான உற்பத்தி நிறுவனமும் மனித உயிரிழப்புக்கு காரணமான குற்றத்தில் குற்றவாளிகள் என பிரான்ஸ் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாரிஸில் உள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பில், விமான விபத்திற்கான முழுப் பொறுப்பும் இரு நிறுவனங்களிடமே இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2023ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில் இந்த நிறுவனங்கள் விடுவிக்கப்பட்டிருந்த போதிலும், எட்டு வாரங்கள் நீடித்த மறுவிசாரணைக்குப் பின்னர் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஏர் பிரான்ஸ் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்கள் இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளன.

2009ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் திகதி, பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரிலிருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸை நோக்கி பயணித்த ஏர் பிரான்ஸ் விமானம் AF447, அட்லாண்டிக் பெருங்கடலுக்கு மேல் கடும் புயல் நிலையை எதிர்கொண்டபோது கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்தது. அந்த விமானத்தில் பயணித்த 216 பயணிகளும் 12 பணியாளர்களும் உயிரிழந்தனர்.

இந்த விபத்து பிரான்ஸ் விமான வரலாற்றிலேயே மிகப்பெரிய பேரழிவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. விபத்துக்குள்ளான விமானத்தின் சிதைவுகள் மற்றும் கருப்புப் பெட்டி (Flight Recorder) பல மாத தேடுதல்களின் பின்னரே கண்டுபிடிக்கப்பட்டன. விமானத்தின் கருப்புப் பெட்டி 2011ஆம் ஆண்டில்தான் கடலடியில் இருந்து மீட்கப்பட்டது.

விபத்தில் உயிரிழந்தவர்கள் 33 நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். அவர்களில் பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, பிரித்தானியா, அயர்லாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இருந்தனர். குழந்தைகள், மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் பிரேசிலிய அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் பெட்ரோ லூயிஸ் டி ஓர்லியன்ஸ் உள்ளிட்ட பலரும் உயிரிழந்தவர்களில் அடங்குகின்றனர்.

விசாரணைகளின் போது, விமானத்தின் வேகத்தை அளக்கும் சென்சார்கள் தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளானது கண்டறியப்பட்டது. தவறான வேகத் தகவலால் குழப்பமடைந்த விமானிகள், விமானம் கீழ்நோக்கி செல்ல வேண்டிய சூழலில் அதனை மேல்நோக்கி இயக்கியதால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

2012ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கையில், தொழில்நுட்பக் கோளாறுகளும் விமானிகளின் தவறான நடவடிக்கைகளும் இணைந்து இந்த பேரழிவை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது. இந்த சம்பவத்திற்குப் பின்னர் உலகளவில் விமானிகளுக்கான பயிற்சிமுறைகள் மேம்படுத்தப்பட்டதுடன், விமானங்களில் பயன்படுத்தப்பட்ட வேக அளவீட்டு சென்சார்களும் மாற்றப்பட்டன.

நீதிமன்றத் தீர்ப்பை கேட்க பல உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும் நீதிமன்றத்தில் கலந்துகொண்டனர். பல ஆண்டுகளாக நீதி கேட்டு போராடிய குடும்பங்களுக்கு இந்த தீர்ப்பு ஓரளவு நிம்மதியை அளித்ததாக கூறப்படுகிறது.

AF447 பாதிக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவரும், தனது மகனை இவ்விபத்தில் இழந்தவருமான டேனியல் லாமி, இந்த தீர்ப்பை வரவேற்று, “பல ஆண்டுகளுக்குப் பிறகு நீதித்துறை எங்களது வேதனையை ஏற்றுக்கொண்டுள்ளது” என்று தெரிவித்தார்.

நீதிமன்றம் ஏர் பிரான்ஸ் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்களுக்கு தலா 225,000 யூரோ அபராதம் விதிக்க கோரியுள்ளது. எனினும், பல குடும்பத்தினர் இந்த அபராதத் தொகை 228 உயிர்களுக்கு ஒப்பிடும்போது மிகவும் குறைவானது என விமர்சித்துள்ளனர்.

இந்த விபத்து உலகளாவிய விமானப் பாதுகாப்பு நடைமுறைகள், அவசரகால மீட்பு நடவடிக்கைகள் மற்றும் விமான தொழில்நுட்ப பாதுகாப்பு குறித்து பெரிய மாற்றங்களை ஏற்படுத்திய முக்கிய சம்பவமாகக் கருதப்படுகிறது.

Related Articles

Back to top button