EN
Local

ஸ்ரீ லங்கா டெலிகொம் நிர்வாகத்திற்கு எதிராக பங்குதாரர்கள் கண்டனப் போராட்டம் – 19 ஆம் திகதி திட்டம்

ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் தற்போதைய நிர்வாக சபை மேற்கொண்டு வரும் தன்னிச்சையான தீர்மானங்கள் மற்றும் மோசடி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நிறுவனத்தின் பங்குதாரர்கள் எதிர்வரும் 19 ஆம் திகதி பாரிய கண்டனப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக டெலிகோம் பங்குதாரர்கள் ஒன்றிய தொழிற்சங்க தலைவர் ஜி. அநுர பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

பங்குதாரர்கள் பொதுக் கூட்டம் தொடர்பான சர்ச்சை

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 35 ஆண்டுகளாக நேரடியாக நடத்தப்பட்டு வந்த பங்குதாரர்களின் பொதுக் கூட்டம் எதிர்வரும் 19 ஆம் திகதி இணையவழியாக (online) நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதற்கு தாம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி செயலகம், திறைசேரி மற்றும் பங்குச் சந்தை அதிகாரிகளுக்கு கடிதங்கள் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தாலும் இதுவரை எந்தவித பதிலும் கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

நிர்வாக சபை மீதான குற்றச்சாட்டுகள்

தற்போதைய நிர்வாக சபையில் 70 வயதை கடந்தவர்கள் பதவி வகிக்கக் கூடாது என்ற விதிமுறை இருந்தபோதிலும், அதனை மீறி நியமனங்கள் மேற்கொள்ள முயற்சிகள் நடைபெறுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், நிறுவனத்தின் இலாபத்தில் 30 சதவீதம் பங்குதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற விதி பின்பற்றப்படவில்லை எனவும், நிர்வாகம் விருப்பப்படி இலாபக் கணக்கீடுகளை மாற்றி, டொலர் கையிருப்பை அடிப்படையாகக் கொண்டு போலியான இலாபப் படத்தை உருவாக்குகிறது எனவும் அவர் கூறினார்.

ஜனாதிபதியிடம் தலையீடு கோரிக்கை

பொது மக்களும், 10 இலட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களும், ஊழியர்களும் பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னர் இவ்வாறான மக்கள் பிரச்சினைகளில் ஆதரவு வழங்கிய அரசியல் தரப்புகள் தற்போது அதிகாரத்தில் இருப்பதால் இத்தகைய நிலை ஏற்படும் என தாம் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தி உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையெனில் தற்போதைய நிர்வாக சபைக்கு எதிராக பாரிய அளவிலான கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.

Related Articles

Back to top button