சிறுமி கடத்தல் மற்றும் துஷ்பிரயோகம் சம்பவம் – தாய் கைது, தேரருக்கு வெளிநாட்டு பயணத் தடை

நிட்டம்புவ பகுதியில் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதுடன், அதற்கு முன்னர் இடம்பெற்றதாக கூறப்படும் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமியின் தாய் நேற்று (08) பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் அட்டமஸ்தானாதிபதி தேரருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளில் வெளிவந்த தகவலின்படி, கடந்த மார்ச் 6ஆம் திகதி சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நிட்டம்புவ பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்தது. இதையடுத்து சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர், பாதிக்கப்பட்ட சிறுமி நீதிமன்ற உத்தரவின் பேரில் ராகம சிறுவர் பாதுகாப்பு மையத்தில் தங்கவைக்கப்பட்டார்.
அங்கு இருந்தபோது, தமக்கு முன்பு இடம்பெற்றதாக கூறப்படும் துஷ்பிரயோகங்கள் குறித்து சிறுமி வாக்குமூலம் வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில் நிட்டம்புவ பொலிஸாரின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மேலும், அனுராதபுரத்தில் சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் இடத்தில் அறிவியல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, கிடைத்த சான்றுகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
நேற்று (08) அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பாதிக்கப்பட்ட சிறுமியின் சாட்சியங்களை காணொளி பதிவு செய்ய தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.




