ஐபிஎல்: பஞ்சாப் கிங்ஸை 23 ஓட்டங்களால் வீழ்த்தி RCB ப்ளே-ஆஃப் தகுதி பெற்றது

தரம்சாலா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்ற முக்கியமான ஐபிஎல் போட்டியில், நடப்பு சம்பியன் Royal Challengers Bengaluru அணி, Punjab Kings அணியை 23 ஓட்டங்களால் தோற்கடித்து, ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணியாக மாறியது.
இந்த தோல்வியால், கடந்த சீசனின் உப சம்பியன் பஞ்சாப் கிங்ஸ் அணி ப்ளே-ஆஃப் வாய்ப்பை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஆர்சிபி அணியின் வெற்றிக்கு விராட் கோஹ்லி மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோரின் அரைச்சதங்களும், ஜோஷ் ஹேஸல்வுட் மற்றும் ராசிக் சலாம் ஆகியோரின் துல்லியமான கடைசி ஓவர் பந்துவீச்சும் முக்கிய பங்காற்றின.
முதலில் துடுப்பெடுத்தாடிய RCB அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 222 ஓட்டங்களைப் பெற்றது. ஜேக்கப் பெத்தேல் 11 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் தேவ்தத் படிக்கல் மற்றும் விராட் கோஹ்லி இணைந்து 76 ஓட்டங்கள் பகிர்ந்தனர். கோஹ்லி 58 ஓட்டங்களையும், படிக்கல் 45 ஓட்டங்களையும் பெற்றனர்.
அதன் பின் வெங்கடேஷ் ஐயர் மற்றும் டிம் டேவிட் இணைந்து 65 ஓட்டங்கள் சேர்த்தனர். வெங்கடேஷ் ஐயர் ஆட்டமிழக்காமல் 73 ஓட்டங்களையும், டிம் டேவிட் 28 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் பஞ்சாப் கிங்ஸ் சார்பாக ஹர்ப்ரீத் ப்ரார் 2 விக்கெட்களை எடுத்தார்.
223 ஓட்டங்களை இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 199 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
ஷஷாங்க் சிங் (56), கூப்பர் கொனலி (37), மார்கஸ் ஸ்டோய்னிஸ் (37), சூர்யன்ஷ் ஷெஜ் (35) ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.
கடைசி இரண்டு ஓவர்களில் வெற்றிக்கு 40 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், ஜோஷ் ஹேஸல்வுட் 19வது ஓவரில் வெறும் 7 ஓட்டங்கள் மட்டுமே வழங்கி அழுத்தத்தை உருவாக்கினார்.
பின்னர் கடைசி ஓவரை வீசிய ராசிக் சலாம், 4 ஓட்டங்கள் மட்டும் வழங்கி 2 முக்கிய விக்கெட்களை கைப்பற்றி RCB வெற்றியை உறுதி செய்தார்.
பந்துவீச்சில் ராசிக் சலாம் 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும், புவனேஷ்வர் குமார் 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பெற்றனர்.
ஆட்டநாயகன்: வெங்கடேஷ் ஐயர்




