கொழும்பில் போலி அமெரிக்க டொலர்களுடன் ஐவர் கைது

கொழும்பிலுள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, பெண் ஒருவர் உட்பட நால்வர் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 600,000 போலி அமெரிக்க டொலர்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதனுடன் தொடர்புடைய மற்றொரு நடவடிக்கையில், வெல்லம்பிட்டி பகுதியில் சுமார் 19 கோடி ரூபாய் பெறுமதியான போலி அமெரிக்க டொலர்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் தகவலின்படி, வெல்லம்பிட்டி பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த பெண்ணே இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட போலி நாணயங்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த இரண்டு சம்பவங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், போலி நாணய வலையமைப்பின் பின்னணியை கண்டறிய விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




