குவைத் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் இலங்கை கவலை வெளியீடு

குவைத் சர்வதேச விமான நிலையத்தின் சிவில் கட்டமைப்பை இலக்காகக் கொண்டு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது. இத்தாக்குதலில் மூன்று இலங்கைப் பிரஜைகள் காயமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வாழ்ந்து பணியாற்றி வரும் பத்து இலட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் முதன்மை முன்னுரிமையாகும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்களின் உயிர் பாதுகாப்பிற்கும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பதற்ற நிலை மேலும் அதிகரிக்காத வகையில், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என இலங்கை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள இலங்கை, பிராந்திய ஸ்திரத்தன்மையை பேணுதல், பொதுமக்களைப் பாதுகாத்தல் மற்றும் மோதல்களுக்கு பேச்சுவார்த்தை மற்றும் அமைதியான தீர்வுகளை ஊக்குவித்தல் ஆகிய நோக்கங்களுக்காக முன்னெடுக்கப்படும் சர்வதேச முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என தெரிவித்துள்ளது.




