EN
Local

சுகாதார அமைச்சு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறிதலுக்காக அதிநவீன இயந்திரங்களை இணைக்கிறது

பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் ஒன்றான கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை வழங்குவதற்காக 114 மில்லியன் ரூபா செலவில் 18 அதிநவீன ‘கொல்போஸ்கோப்பி’ (Colposcopy) இயந்திரங்களை வைத்தியசாலை கட்டமைப்பில் இணைக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் மூலம் நாட்டில் உள்ள இத்தகைய இயந்திரங்களின் மொத்த எண்ணிக்கை 15 இலிருந்து 33 ஆக அதிகரிக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை 60 இலட்சம் ரூபா மதிப்புடைய 12 இயந்திரங்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அநுராதபுரம், கண்டி, கம்பஹா உள்ளிட்ட வைத்தியசாலைகளில் நிறுவப்பட்டுள்ளன.

மேலும் 42 மில்லியன் ரூபா செலவில் மீதமுள்ள 6 இயந்திரங்கள் எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் வவுனியா, அம்பாறை, ராகம, களுத்துறை உள்ளிட்ட போதனா மற்றும் மாவட்ட பொது வைத்தியசாலைகளில் நிறுவப்படவுள்ளன. அதேபோல் பயன்பாட்டில் உள்ள பழைய 5 இயந்திரங்கள் அகற்றப்பட்டு அவற்றுக்கு பதிலாக புதிய இயந்திரங்கள் பொருத்தப்பட உள்ளன.

கர்ப்பப்பை வாய் மற்றும் யோனிப் பகுதியில் ஏற்படும் அசாதாரண செல்கள் அல்லது புண்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவதற்கு இந்த அதிநவீன உபகரணம் மகப்பேறு விசேட மருத்துவர்களுக்கு உதவுகிறது.

ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) மூலம் பரவும் இந்த புற்றுநோயால் நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 1,200 பேர் பாதிக்கப்படுவதாகவும், முறையான சிகிச்சை இல்லாததால் சுமார் 180 பேர் வரை உயிரிழப்பதாகவும் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

Related Articles

Back to top button