EN
Local

மின்சாரக் கட்டண திருத்தம்: 180 அலகுகளுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு மட்டும் 18% உயர்வு

2026ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்கான மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, மாதம் 180 அலகுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு உபயோகிப்பாளர்களுக்கு மட்டும் 18 சதவீத மின்சாரக் கட்டண உயர்வு அமல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 180 அலகுகளுக்கு குறைவாக பயன்படுத்தும் வீட்டு பயனாளர்களுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது எனவும் ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது.

மின்சார உற்பத்தி செலவுகள் அதிகரித்ததாலும், ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில் ஏற்பட்ட சுமார் 38 பில்லியன் ரூபாய் பற்றாக்குறையாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மூன்று முக்கிய காரணிகள் பரிசீலிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், அரசாங்கம் 15 பில்லியன் ரூபாய் நிதி உதவியை வழங்க எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளதால், மொத்த மின்சார நுகர்வோரில் சுமார் 5 சதவீதமானோருக்கு மட்டுமே இந்த கட்டண உயர்வு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாட்டின் 95 சதவீத மின்சார நுகர்வோர் இந்த கட்டண உயர்விலிருந்து பாதிக்கப்படமாட்டார்கள் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த புதிய மின்சாரக் கட்டண திருத்தம் 2026 மே 11ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button