இலங்கை பிரதமர் லண்டனில் இலங்கை சமூகத்தினரை சந்தித்தார்

ஐக்கிய இராச்சியத்துக்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் இருக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, லண்டனில் வசிக்கும் இலங்கை சமூகத்தினரை 20ஆம் திகதி சந்தித்து நட்புறவான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
வாரநாளாக இருந்தபோதிலும், சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் ஆயிரம் பேர் மிகுந்த உற்சாகத்துடன் இந்நிகழ்வில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் சர்வதேச நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தற்போதைய அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்தி, மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்தார். மேலும், இலங்கையின் அரசியல் பண்பாடு தற்போது நேர்மறையான மாற்றத்தைக் கண்டுள்ளதாகவும், அது மீள முடியாத மாற்றமாக மாறியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சர் சரோஜா பால்ராஜ் உரையாற்றுகையில், நாட்டில் அனைத்து சமூகங்களும் சமமாக நடத்தப்படும் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் பயன்கள் அனைவருக்கும் நியாயமாகப் பகிரப்படும் ஒரு நிர்வாக அமைப்பு தற்போது உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பாரம்பரிய அரசியல் கூட்டங்களை விட வேறுபட்ட முறையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கை சமூகத்தினருக்கு பிரதமர் மற்றும் அமைச்சரிடம் நேரடியாக கேள்விகள் எழுப்பவும், கருத்துகளை பகிரவும் திறந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வின் ஏற்பாட்டுக் குழு, அனைத்து செலவுகளும் (இரவு உணவு உட்பட) பங்கேற்பாளர்களாலேயே ஏற்கப்பட்டதாக தெரிவித்தது. பொதுப் பணத்தை தவறாக பயன்படுத்தி நிகழ்வுகளை நடத்தும் பழக்கமுள்ள எதிர்க்கட்சிகள் இவ்வாறான வெளிப்படையான நடைமுறையால் அச்சமடைந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்நிகழ்வில் பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சர் சரோஜா பால்ராஜ் மற்றும் ஐக்கிய இராச்சியத்துக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் நிமல் சேனாதீர ஆகியோர் கலந்துகொண்டனர்.



