விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு இடமில்லை; உயிரிழந்த உறவுகளை நினைவுகூர உரிமை உள்ளது – அமைச்சர் ஆனந்த விஜேபால

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் Ananda Wijepala இன்று (09) பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில், விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் எந்தவொரு செயற்பாடுகளுக்கும் அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது எனத் தெரிவித்தார்.
சபையில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் உரிமை மக்களுக்கு இருப்பதாகவும், அதனை யாரும் மறுக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.
மேலும், விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய பாடலை ஒலிபரப்பியதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ள கிளிநொச்சி இளைஞன் தொடர்பாக, பொலிஸ் மா அதிபரும் சட்ட மா அதிபரும் இன்று கலந்துரையாடவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
அந்தக் கலந்துரையாடலின் பின்னர் குறித்த விவகாரம் தொடர்பில் சாதகமான தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் அரசியல் மற்றும் மனித உரிமை வட்டாரங்களில் தொடர்ந்தும் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.




