EN
Local

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெசாக் கூடு சேதப்படுத்தல்: தேவையற்ற விசமப் பிரசாரங்களைத் தவிர்க்குமாறு பீடாதிபதி கோரிக்கை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிகப் பீடத்தில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் கூடு சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தேவையற்ற மற்றும் விசமமான பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று பீடாதிபதி பேராசிரியர் என். கெங்காதரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், அந்தப் பீடத்தில் கல்வி கற்கும் அனைத்து இன, மத மாணவர்களும் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவ உணர்வுடன் தங்கள் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு இன, மத, சமூக மற்றும் கலாசாரப் பாரம்பரியங்களுக்கும் மதிப்பளிக்கும் வகையில், மாணவர்களின் கலாசார நிகழ்வுகள் வழமையாக அனுமதிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதன்படி, கடந்த மே 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் பௌத்த மாணவர்கள் வெசாக் நிகழ்வுகளை நடத்துவதற்கு முறையாக அனுமதி பெற்றிருந்தனர். அனைத்து மதங்களுக்கும் சமமான மரியாதை வழங்கும் கொள்கையின் அடிப்படையில் பல்கலைக்கழகம் அதற்கு அனுமதி வழங்கியிருந்தது. மே 30 ஆம் திகதி நிகழ்வுகள் எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி நிறைவடைந்தன.

மே 31 ஆம் திகதி இரவு நிகழ்வுகள் அமைதியாக முடிவடைந்த பின்னர், இரவு சுமார் 10.50 மணியளவில் முகங்களை துணியால் மூடிய இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் மதிலைத் தாண்டி வளாகத்திற்குள் நுழைந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த வெசாக் அலங்காரங்களை சேதப்படுத்தியதாக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவதானித்துள்ளனர்.

பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை நோக்கிச் சென்றபோது, அவர்கள் மீண்டும் மதிலைத் தாண்டி தப்பிச் சென்றுள்ளனர்.

அதன் பின்னர், நள்ளிரவு சுமார் 12.50 மணியளவில் அதே நபர்கள் மீண்டும் வளாகத்திற்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவர்களை விரட்டிச் சென்றபோதும், அவர்கள் மீண்டும் தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக உடனடியாக பீடாதிபதிக்கு தகவல் வழங்கப்பட்டதுடன், தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. கோப்பாய் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து தகவல்களை சேகரித்தனர். துணைவேந்தரின் அறிவுறுத்தலின் பேரில் பல்கலைக்கழக பதிவாளரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.

இந்த அநாகரிகச் செயலில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் நோக்கில் விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், பீடத்தில் கல்வி நடவடிக்கைகள் வழமையான முறையில் சுமுகமாக நடைபெற்று வருவதாகவும், இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இன நல்லுறவை பாதிக்கும் வகையிலான தவறான தகவல்கள் மற்றும் தேவையற்ற பிரசாரங்கள் பரவி வருவதாகவும் பேராசிரியர் கெங்காதரன் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழகத்தின் அமைதியான சூழலையும், தமிழ் மற்றும் சிங்கள மாணவர்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் நோக்கில் இந்தச் செயல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் நிலைமையை தெளிவாகப் புரிந்துகொண்டுள்ளனர் என்பதால், யாரும் தேவையற்ற அல்லது இனவாத உணர்வுகளைத் தூண்டும் வகையிலான விசமப் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Articles

Back to top button