EN
Local

வலி. வடக்கில் காணி விடுவிப்புக்கு காலக்கெடு கூற முடியாது – க. இளங்குமரன்

வலி. வடக்கில் உள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக குறிப்பிட்ட கால எல்லையை தற்போது அறிவிக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் நேரில் வந்து நிலைமைகளை ஆராய்ந்துள்ளதாகவும், அதன் பின்னர் நாடாளுமன்ற பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் இது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டு, உடனடியாக விடுவிக்கக்கூடிய காணிகள் மக்களிடம் கையளிக்கப்படும் என்றும் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கில் உள்ள இராணுவ கட்டமைப்புகளை எவ்வாறு மறுசீரமைத்து மக்களின் காணிகளை மீள வழங்குவது என்பது குறித்து ஆய்வு செய்வதற்காகவே பாதுகாப்பு பிரதி அமைச்சர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டதாகக் குறிப்பிட்டார்.

வடமாகாண ஆளுநர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட உயர்மட்ட குழுவினர், இராணுவ முகாம்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று நிலைமைகளை ஆராய்ந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் விரிவாக்கத்திற்குத் தேவையான காணிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக அவர் கூறினார். முன்னர் விமான நிலையத் திட்டத்திற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட சில காணிகளுக்கான இழப்பீடுகள் இன்னும் வழங்கப்படவில்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், விமான நிலைய விரிவாக்கத்திற்குத் தேவையான காணி அளவு குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், காணிகள் சுவீகரிக்கப்படும் பட்சத்தில் உரிய இழப்பீடுகள் காணி உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அடுத்த முக்கிய சர்வதேச விமான நிலையமாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும், அதற்குத் தேவையில்லாத ஏனைய காணிகள் மக்களிடம் மீள கையளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அதேவேளை, தற்போது இராணுவம் பயன்படுத்தாதபோதிலும் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள சில காணிகளை அவசர நடவடிக்கையாக விடுவிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பாடசாலைகள் அமைந்துள்ள பகுதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை விடுவிப்பதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

காணி விடுவிப்பு தொடர்பில் துல்லியமான காலக்கெடுவை அறிவிக்க முடியாது என மீண்டும் வலியுறுத்திய அவர், இதற்கான நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு சார்ந்த பரிசீலனைகள் உள்ளதாகக் கூறினார். நாடாளுமன்ற பாதுகாப்புக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், உடனடியாக விடுவிக்கக்கூடிய காணிகள் முதற்கட்டமாக மக்களிடம் கையளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Related Articles

Back to top button