EN
Local

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா தாக்கல் செய்த மனு பரிசீலனைக்கு

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டு வழக்கினை தள்ளுபடி செய்யுமாறு கோரி, முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனுவின் சமர்ப்பணங்களை உறுதிப்படுத்துவதற்காக செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி அழைக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தலைமை நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகிய மூவர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று (15) அழைக்கப்பட்டிருந்தது.

ஊழல் குற்றச்சாட்டின் கீழ் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தமக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மனுதாரரான முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாது எனத் தமது சட்டத்தரணிகள் ஆரம்பகட்ட ஆட்சேபனைகளை முன்வைத்த போதிலும், மேல் நீதிமன்றம் அதனை நிராகரித்துள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேல் நீதிமன்றத்தின் அந்தத் தீர்மானம் சட்டத்திற்கு முரணானது எனவும், தமக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிடுமாறும் மனுதாரர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

இதன்போது முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதியரசர்கள் குழாம், குறித்த மனுவை செப்டம்பர் 7ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்டது.

Related Articles

Back to top button