புத்த ரஷ்மி வெசாக் வலயத்தை ஒழுங்கமைப்பதற்கான இறுதிக் கலந்துரையாடல்

புத்த ரஷ்மி வெசாக் வலயத்தை ஒழுங்கமைப்பதற்கான இறுதிக் கலந்துரையாடல் (20) அலரி மாளிகையில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, புத்த ரஷ்மி வெசாக் வலயத்தின் முன்னெற்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் வெசாக் காலப்பகுதியில் மின்சக்திப் பயன்பாடு தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
வெசாக் பண்டிகையை முன்னிட்டு அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டிருந்த எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது. அதேவேளை, வெசாக் வலய நிகழ்வுகளை வெற்றிகரமாக ஒருங்கிணைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுக்களின் உறுப்பினர்களின் விபரங்களைப் பெறும் நடவடிக்கையும் இடம்பெற்றது.
தற்போதைய நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இம்முறை எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அதிக மின்சாரம் மற்றும் எரிபொருள் செலவில்லாமல், பக்தர்களின் மனதை மகிழ்விக்கும் வகையில் ஆன்மீக முக்கியத்துவம் கொண்ட வெசாக் அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு கங்காராம விகாரையின் விகாராதிபதி கலாநிதி வணக்கத்துக்குரிய கிரிந்தே அஸ்ஸஜி தேரர் தெரிவித்தார்.
மேலும், இம்முறை வெசாக் வலயம் இரவு 7 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கங்காராம விகாரையின் விகாராதிபதி கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி தேரர், முப்படைகள், இலங்கை பொலிஸ், சிவில் பாதுகாப்புத் திணைக்களம், சிறைச்சாலைகள் திணைக்களம், மின்சக்தி அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




