EN
Local

கிராமப்புற வீதிகள், குடிநீர் மற்றும் கழிவுப் பிரச்சினைகளுக்கு அடுத்த வரவுசெலவுத் திட்டத்தில் முன்னுரிமை – ஜனாதிபதி

கிராமப்புற வீதி அபிவிருத்தி, குடிநீர் விநியோகம் மற்றும் திடக்கழிவு முகாமைத்துவப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அடுத்த வரவுசெலவுத் திட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் புதன்கிழமை (20) நடைபெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் குடிநீர், நீர்ப்பாசனம் மற்றும் கைத்தொழில் தேவைகளுக்கான நீர் வழங்கல் திட்டங்கள் குறித்து மக்கள் பிரதிநிதிகளும் பொதுமக்களும் இணைந்து கலந்துரையாடி விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார். மேலும், இதுகுறித்து நேரடியாக கலந்துரையாடுவதற்காக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளை மாவட்டத்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பெரிய அளவிலான நீர் வழங்கல் திட்டங்கள் நடைமுறைக்கு வரும் வரை, மக்களின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தற்காலிக அவசர நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.

நீர் வழங்கல் சபையினால் இதுவரை திட்டமிடப்பட்டுள்ள அனைத்து திட்டங்களுக்கும் தேவையான நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

இதேவேளை, மாவட்டத்தில் நடைபெற்று வரும் வீதி மற்றும் பாலம் அமைக்கும் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் அவற்றில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. திட்டமிடப்பட்டுள்ள அனைத்து வீதித் திட்டங்களின் பணிகளையும் இவ்வருடத்திற்குள் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மாவட்டத்தின் காணிப் பிரச்சினைகள், வனவிலங்கு திணைக்களத்தின் கீழ் உள்ள மேய்ச்சல் தரைகள் தொடர்பான சிக்கல்கள் மற்றும் அவற்றுக்கான சாத்தியமான தீர்வுகள் குறித்தும் கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கைக்கும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

கிழக்கு மாகாண மீன்பிடித் தொழிலின் முக்கிய மையமாகக் கருதப்படும் வாழைச்சேனை துறைமுகத்தை முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மற்றும் அங்கு கலங்கரை விளக்கம் அமைப்பதற்கான தேவை குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், மாவட்டத்தில் வெள்ளக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், யானை – மனித மோதலைக் குறைக்கும் திட்டங்கள், சுகாதார வசதிகளை மேம்படுத்தும் பணிகள் உள்ளிட்ட பல விடயங்கள் மீளாய்வு செய்யப்பட்டன.

‘தித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டத்தின் முன்னேற்றம், வீடுகளுக்கான சேதஈடு மற்றும் புதிய வீடமைப்புத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் ஜனாதிபதி ஆராய்ந்தார்.

அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ‘சமூக சக்தி’ திட்டத்தின் செயற்பாடுகள், அதன் முன்னேற்றம் மற்றும் எதிர்கொள்ளப்படும் சவால்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

Related Articles

Back to top button