களனிவெளி புகையிரதப் பாதையை இரத்தினபுரி வரை நீடிப்பதற்கான விபரத்திட்டம் தயாரிப்பு

களனிவெளி புகையிரதப் பாதையை அவிசாவளை தொடக்கம் இரத்தினபுரி வரை நீடிப்பதற்கான சாத்தியவளக் கற்கை மற்றும் விபரத்திட்டத்தைத் தயாரிப்பதற்கான ஆலோசனைச் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
களனிவெளி புகையிரதப் பாதையை அவிசாவளை தொடக்கம் இரத்தினபுரி வரை நீடிப்பதற்கான சாத்தியவளக் கற்கை மற்றும் விபரத்திட்டத்தைத் தயாரிப்பதற்காக 2025.10.21 அன்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்காக, விருப்பக்கோரல்கள் பெற்றுக் கொள்வதற்காக தேசிய போட்டி விலைமுறி முறையின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், விலைமனுதாரர்கள் 08 பேர் விருப்பக்கோரல்களைச் சமர்ப்பித்துள்ளனர்.
அவற்றில், குறுகிய பட்டியல்படுத்தப்பட்ட விலைமனுதாரர்களிடம் இருந்து சமர்ப்பிக்கப்பட்ட தொழிநுட்ப முன்மொழிவுகளை மதிப்பீடு செய்த பின்னர் தகைமை பெற்றுள்ள 04 நிறுவனங்களிடம் நிதி முன்மொழிவுக் கோரல்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறித்த நிதி முன்மொழிவுகளை மதிப்பீடு செய்த பின்னர் களனிவெலி புகையிரதப் பாதையை அவிசாவளை தொடக்கம் இரத்தினபுரி வரை நீடிப்பதற்கான சாத்தியவளக் கற்கை மற்றும் விபரத்திட்டத்தைத் தயாரிப்பதற்கான ஆலோசனைச் சேவை ஒப்பந்தத்தை எம்.எஸ் ரிசோர்ஸ் டிவலொப்மன்ட் கொன்சல்டன்ஸ் பிரைவட் லிமிடட்டிற்கு 356.22 மில்லியன் ரூபாய்களுக்கு வழங்குவதற்கு ஆலோசனை பெறுகைக் குழு சிபாரிசு செய்துள்ளது. அதற்கமைய, குறித்த சிபாரிசுகளின் பிரகாரம் பெறுகையை வழங்குவதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.




