அர்த்தமுள்ள மாற்றத்திற்கு பொறுமையும் மக்கள் பங்களிப்பும் அவசியம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

அர்த்தமுள்ள சமூக மற்றும் அரசியல் மாற்றங்களை உருவாக்குவதற்கு பொறுமை, பேச்சுவார்த்தை மற்றும் தொடர்ச்சியான மக்கள் ஈடுபாடு அவசியமானவை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான ஒக்ஸ்போர்ட் உலகளாவிய மற்றும் பிராந்திய ஆய்வுகள் பிரிவின் வருடாந்த விரிவுரையில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பிரதமர், “அபிவிருத்தியின் அரசியல்: இலங்கையும் அதற்கு அப்பாலும்” என்ற தலைப்பில் உரையாற்றியபோதே இந்த கருத்துகளை வெளியிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், அபிவிருத்தி என்பது வெறும் பொருளாதார புள்ளிவிவரங்கள், கொள்கைகள் அல்லது வளர்ச்சி மாதிரிகள் மூலம் மட்டும் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்று அல்ல என்றும், மக்களின் அன்றாட வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில் அணுகப்பட வேண்டிய ஒன்றாகும் என்றும் குறிப்பிட்டார்.
குறிப்பாக பொருளாதார நெருக்கடிகள், நிறுவன ரீதியான சவால்கள் மற்றும் நீண்டகால சமத்துவமின்மைகளிலிருந்து மீண்டு வரும் நாடுகளில், அரசாங்கங்கள் கொள்கைகளையும் நடைமுறை யதார்த்தங்களையும் சமநிலைப்படுத்துவது மிகவும் முக்கியமானதாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
பெண்களின் அரசியல் பங்களிப்பு குறித்து கருத்து தெரிவித்த பிரதமர், அடிமட்ட அரசியல் இயக்கங்களிலும் தலைமைத்துவப் பொறுப்புகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதாகவும், பெண்களுக்கு அதிக அரசியல் வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். இருப்பினும், சமூக மற்றும் அரசியல் கட்டமைப்புகளில் ஆழமாக வேரூன்றியுள்ள தடைகளை மாற்றுவது இன்னும் சவாலாகவே உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொருளாதார மீட்சி மற்றும் சமூகக் கொள்கைகள் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், ஊதியம் பெறும் மற்றும் பெறாத பராமரிப்பு பணிகளின் மதிப்பை அங்கீகரிப்பது மிகவும் அவசியமானது என வலியுறுத்தினார். பெண்கள் குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் தேசிய பொருளாதாரத்திற்கு வழங்கும் பங்களிப்புகள் பாரம்பரிய பொருளாதார அமைப்புகளில் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நிலையான அபிவிருத்தி என்பது பொருளாதார வளர்ச்சியை மட்டுமல்லாது, மனித கௌரவம், சமூக நீதி மற்றும் மக்கள் நலனையும் பாதுகாக்க வேண்டிய ஒன்றாக இருக்க வேண்டும் என பிரதமர் தெரிவித்தார்.
அரசாங்கங்கள், சர்வதேச அபிவிருத்தி அமைப்புகள் மற்றும் உள்ளூர் நிறுவனங்களுக்கு இடையிலான உறவுகள் குறித்து கருத்து வெளியிட்ட அவர், அபிவிருத்தி முன்னுரிமைகள் உள்ளூர் மக்களின் தேவைகளுக்கும் உண்மையான சூழ்நிலைகளுக்கும் ஏற்ப அமைய வேண்டும் என்றும், அவை மக்களுக்குப் பொறுப்புக்கூறும் தன்மையுடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், மக்கள் போராட்டங்களை நீண்டகால கொள்கை மாற்றங்களாகவும் நிறுவன சீர்திருத்தங்களாகவும் மாற்றுவது எளிதான காரியம் அல்ல என்றும், அதற்கு பொறுமை, கலந்துரையாடல் மற்றும் மக்கள் தொடர்ச்சியாக ஈடுபடுதல் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விரிவுரைக்குப் பின்னர் நடைபெற்ற கலந்துரையாடல் அமர்வில் நல்லாட்சி, நிறுவனங்களின் சுயாதீனம், அரசியல் சீர்திருத்தம், பொருளாதார மீட்சி மற்றும் ஜனநாயகப் பொறுப்புக்கூறல் போன்ற விடயங்கள் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.




