இந்திய நன்கொடையாக இலங்கை பொலிஸாருக்கு 134 கெப் வாகனங்கள் கையளிப்பு

இந்திய – இலங்கை நட்புறவு வேலைத்திட்டத்தின் கீழ் இந்திய அரசாங்கத்தினால் இலங்கை பொலிஸாரின் பயன்பாட்டிற்காக நன்கொடையாக வழங்கப்பட்ட 134 கெப் ரக வாகனங்கள் இன்று திங்கட்கிழமை (25) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
இந்த நிகழ்வு ஜனாதிபதி Anura Kumara Dissanayake அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதற்காக இந்திய அரசாங்கம் சுமார் 300 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட இந்த கெப் வாகனங்கள் வட மாகாண பொலிஸ் நிலையங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, எதிர்காலத்திலும் இலங்கைக்கு இதுபோன்ற உதவிகள் தொடரும் என இதன்போது தெரிவித்துள்ளார்.
இந்த நன்கொடையை பாராட்டி, பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவினால் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, பிரதி அமைச்சர் சுனில் வடகல, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




