கச்சத்தீவு விவகாரத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு யாழ். மீனவர்கள் எச்சரிக்கை

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜோசப் விஜய் வழங்கிய கச்சத்தீவு மீட்பு வாக்குறுதி தேர்தல் கால வாக்குறுதியாகவே முடிவடைய வேண்டும். இல்லையெனில் அவருக்கு எதிராக போராட தயங்கமாட்டோம் என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சம்மேளன பிரதிநிதி செல்லத்துரை நற்குணம் தெரிவித்துள்ளார்.
இந்தக் கருத்தை அவர் செவ்வாய்க்கிழமை (19) யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜோசப் விஜய்க்கு யாழ். மாவட்ட மீனவர் மக்கள் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவிப்பதுடன், சில கோரிக்கைகளையும் முன்வைக்க விரும்புகிறோம்.
கச்சத்தீவு இலங்கையின் சொத்து. அது முறையாக இலங்கைக்கு சொந்தமானது என்பதை இந்திய மக்கள், குறிப்பாக தமிழக மீனவர்கள் நன்கு அறிந்துள்ளனர்.
இருப்பினும், தேர்தல் பிரச்சாரத்தின் போது கச்சத்தீவை இந்தியா மீட்க வேண்டும் என நீங்கள் தெரிவித்திருந்தீர்கள்.
அதை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஏனெனில் தமிழக தேர்தல்களில் மீனவர்களின் வாக்குகளைப் பெற பலரும் இவ்வாறான கருத்துகளை வெளியிடுவது வழக்கமாக உள்ளது.
இப்போது நீங்கள் தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள நிலையில், கச்சத்தீவு தொடர்பில் உண்மைக்கு புறம்பான கருத்துகளை முன்வைக்க வேண்டாம் என விரும்புகிறோம்.
இந்த விவகாரத்தை மீண்டும் கையில் எடுக்க முயற்சித்தால், யாழ். மாவட்ட மீனவ சமுதாயம் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்த தயங்காது.”
இதனிடையே, யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சம்மேளன தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் கருத்து தெரிவிக்கையில்,
தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு மீனவர் சங்கத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்திலிருந்து எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்களால் இலங்கையின் வடக்கு பகுதி மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
அவர்கள் கடல் வளங்களை அழிப்பதுடன், இலங்கை மீனவர்களின் பல கோடி ரூபாய் பெறுமதியான மீன்பிடி வலைகளையும் சேதப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
தற்போது நடைமுறையில் உள்ள மீன்பிடி தடைக்காலம் எதிர்வரும் 15ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவித்து, அதன்பின் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.




