இலங்கை தொடர்பான விரிவாக்கப்பட்ட நிதிவசதி செயற்திட்ட மீளாய்வு குறித்து IMF இயக்குநர் சபை கூடுகிறது

International Monetary Fund இன் இயக்குநர் சபை, இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதிவசதி (Extended Fund Facility) செயற்திட்டத்தின் 5ஆம் மற்றும் 6ஆம் கட்ட மீளாய்வுகள் தொடர்பில் எட்டப்பட்ட உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாட்டுக்கு ஒப்புதல் வழங்குவது குறித்து ஆராய்வதற்காக புதன்கிழமை (27) கூடவுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த Evan Papageorgiou, கடந்த சில ஆண்டுகளில் இலங்கை பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாக கூறினார்.
வெளிநாட்டு கையிருப்பு மட்டத்தை வலுப்படுத்துதல் மற்றும் சந்தை மீதான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் ஆகிய துறைகளிலும் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், அதிகாரிகளின் தொடர்ச்சியான முயற்சிகள் பொதுமக்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் மத்தியில் நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளதையும், அதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் நிலைநிறுத்தப்பட்டுள்ளதையும் அவர் தெரிவித்தார்.
எனினும் அண்மைக்கால உலகளாவிய பொருளாதார போக்குகள் இலங்கையின் பொருளாதாரத்தில் புதிய அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, இலங்கையின் தற்போதைய கொள்கை கட்டமைப்பு கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் வலுவான நிலையில் இருப்பதாகவும், வெளிப்புற அழுத்தங்களை சமாளிக்க இது உதவும் என நம்பிக்கை வெளியிட்டதாகவும் அவர் கூறினார்.




