முள்ளிவாய்க்கால் நினைவு நாள்: வடக்கு–கிழக்கில் மதுபான சாலைகள் மூடுமாறு கோரிக்கை

இன்று (18.05.2026) முள்ளிவாய்க்கால் நினைவு நாள் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதனை முன்னிட்டு, மதுபான சாலைகள் உட்பட அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடி நினைவேந்தல் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்குமாறு கிளிநொச்சி மாவட்ட வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவித்ததாவது, குறிப்பாக அனைத்து மதுபான சாலைகளும் இன்று (18.05.2026) முழுமையாக மூடப்பட்டிருக்க வேண்டும் எனவும், இது கிளிநொச்சி மாவட்டத்தினரும் வர்த்தக சங்கத்தினரும் இணைந்து விடுக்கும் வேண்டுகோள் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், வடக்கு–கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து வர்த்தகர்களும் இந்த நினைவேந்தலுக்கு முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
2009 ஆம் ஆண்டு நிகழ்ந்த இறுதிக்கட்ட போரின் போது உயிரிழந்தவர்களை நினைவுகூரும் இந்த நாள், 17 ஆண்டுகள் கடந்த பின்னரும் அவர்களின் நினைவைப் போற்றும் முக்கிய நிகழ்வாக கருதப்படுவதால், அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.




