EN
Local

மூத்த அரசியல் ஆய்வாளர் மற்றும் ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் காலமானார்

இலங்கையின் மிக முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் சிரேஷ்ட ஆங்கில ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளரும், பத்தி எழுத்தாளருமான டி.பி.எஸ். ஜெயராஜ் காலமானார்.

அவரது மறைவு தொடர்பான தகவலை அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

இலங்கை அரசியல், இனப்பிரச்சினை, புவிசார் அரசியல், தமிழ் சமூக விவகாரங்கள் மற்றும் தமிழ் திரைப்படத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து ஆழமான மற்றும் விரிவான அரசியல் ஆய்வுக் கட்டுரைகளை பல தசாப்தங்களாக எழுதி வந்தவர் டி.பி.எஸ். ஜெயராஜ் ஆவார். அவரது கட்டுரைகள் இலங்கை மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பெரும் வாசகர் வட்டத்தை பெற்றிருந்தன.

அவர் ‘தி ஐலண்ட்’, ‘டெய்லி மிரர்’, ‘டெய்லி எஃப்.டி’ உள்ளிட்ட முன்னணி ஆங்கில நாளிதழ்களில் நீண்டகாலமாக அரசியல் பத்திகள் எழுதி வந்ததுடன், தனது தனிப்பட்ட அரசியல் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்பட்ட இணையத்தளத்தின் மூலமாகவும் தொடர்ந்து எழுதி வந்தார்.

அரசியல் நிகழ்வுகளை ஆழமாக பகுப்பாய்வு செய்யும் திறன், இனப்பிரச்சினைகள் குறித்த விரிவான பார்வை மற்றும் வரலாற்று பின்னணிகளுடன் கூடிய எழுத்து நடை ஆகியவற்றின் மூலம் அவர் தனித்துவமான ஊடகவியலாளராக அறியப்பட்டார்.

அவரது மறைவு இலங்கை ஊடகத்துறைக்கும், அரசியல் ஆய்வுத் துறைக்கும் பாரிய இழப்பாகக் கருதப்படுகிறது.

அன்னாரின் இறுதிச் சடங்குகள் மற்றும் அஞ்சலி நிகழ்வுகள் தொடர்பான விபரங்கள் பின்னர் குடும்பத்தினரால் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button