EN
Local

பல்கலைக்கழகங்களில் 3,000க்கும் அதிகமான விரிவுரையாளர் வெற்றிடங்கள் நிரப்பப்படுகின்றன – உயர்கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னேற்றம்

பல்கலைக்கழகங்களில் நிலவும் 3,000க்கும் அதிகமான விரிவுரையாளர் வெற்றிடங்கள் தற்போது நிரப்பப்பட்டு வருவதாகவும், அதேபோல் கல்வி சாரா ஊழியர் வெற்றிடங்களும் நிரப்பப்படுவதாகவும் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இன்று (06) பாராளுமன்றத்தில் நடைபெற்ற பிரதமருடனான கேள்வி நேரத்தில் ஆளும் கட்சி உறுப்பினர் மஞ்சுள சுகத் ரத்னாக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் மொத்தம் 2,81,810 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்களில் 1,76,530 மாணவர்கள் பல்கலைக்கழக பிரவேசத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 42,937 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு சேர்க்கப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

2025–2026 கல்வியாண்டுக்காக இரண்டு புதிய பாடநெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை 2026 செப்டம்பர் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

உயர்கல்வித் துறையில் கொள்கை மறுசீரமைப்பை மேற்கொள்ள விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டு கடந்த ஆறு மாதங்களாக ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் கூறினார். அந்த குழு தற்போதைய உயர்கல்வி அமைப்பில் உள்ள சிக்கல்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்வி உட்பட விரிவான துறைகளையும் ஆய்வு செய்து வருகிறது.

உயர்கல்வி என்பது பல்கலைக்கழகங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல என்றும், தொழில்முறை கல்வியும் இதில் அடங்கும் என்பதால் முழுமையான மறுசீரமைப்பு திட்டம் அவசியம் என அவர் சுட்டிக்காட்டினார்.

பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை அதிகரித்தாலும், அதற்கேற்ற வகையில் ஆளணி மற்றும் வசதிகள் திட்டமிடப்படாத நிலை காணப்பட்டதாகவும், தற்போது அந்த குறைபாடுகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

2022 முதல் நிரப்பப்படாத வெற்றிடங்கள் காரணமாக ஏற்பட்ட குறைபாடுகளை கவனத்தில் கொண்டு, பல்கலைக்கழகங்கள் கோரும் தேவைகளின் அடிப்படையில் விரிவுரையாளர் வெற்றிடங்களை நிரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

Related Articles

Back to top button