பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் ஐக்கிய இராச்சிய கல்விச் செயலாளர் இடையில் கல்வி ஒத்துழைப்பு தொடர்பான கலந்துரையாடல்

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் விரிவான கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் தொழிற்கல்வி வாய்ப்புகளைப் பலப்படுத்துவது குறித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஐக்கிய இராச்சியத்தின் கல்விச் செயலாளர் பிரிட்ஜெட் பிலிப்சனை சந்தித்து கலந்துரையாடினார்.
ஐக்கிய இராச்சியத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இடம்பெற்ற இந்த இருதரப்புக் கலந்துரையாடலில், கல்வி நிறுவனங்களுக்கிடையிலான கூட்டுறவை மேம்படுத்துதல், உயர்கல்வியின் தரத்தை உறுதிப்படுத்துதல் மற்றும் மாணவர்கள், கல்வியாளர்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் போன்ற விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
மேலும், இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியத்துக்கிடையே நீண்டகாலமாக நிலவி வரும் வரலாற்று முக்கியத்துவமிக்க கல்வி ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்தி, மாணவர் பரிமாற்றத் திட்டங்கள், கூட்டு கல்வி வேலைத்திட்டங்கள் மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இரு தரப்பினரும் கவனம் செலுத்தினர்.
செவ்னிங் (Chevening) புலமைப்பரிசில் மற்றும் பொதுநலவாய புலமைப்பரிசில் திட்டங்கள் போன்ற ஐக்கிய இராச்சியத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் கல்வித் திட்டங்களை பிரதமர் பாராட்டியதுடன், அவை இலங்கையின் மனிதவள திறனை மேம்படுத்தவும் இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால மக்கள் தொடர்புகளை வலுப்படுத்தவும் பெரும் பங்களிப்பை வழங்குவதாகக் குறிப்பிட்டார்.
இலங்கையின் உயர்கல்வித் துறையை தரநிலைகளுடன் மேம்படுத்துவதற்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் விளக்கமளித்தார். அதேவேளை, கல்வித் தரத்தைப் பேணுதல் மற்றும் மாணவர்களின் உரிமைகள், நலன்களைப் பாதுகாப்பதில் ஐக்கிய இராச்சியத்தின் அனுபவங்களும் சிறந்த நடைமுறைகளும் பகிரப்பட்டன.
இக்கலந்துரையாடல், இரு நாடுகளுக்கும் இடையிலான கல்விசார் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில் சாதகமான புரிந்துணர்வுகளுடன் நிறைவடைந்தது.
இந்த நிகழ்வில் ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மற்றும் லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.




