EN
Local

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கான புதிய யாப்பு விரைவில் பாராளுமன்றத்தில் – இரான் விக்ரமரட்ன

Eran Wickramaratne தலைமையிலான Sri Lanka Cricket நிலைமாறுதல் குழு, கிரிக்கெட் நிர்வாகத்தை முறைப்படுத்தவும் வெளிப்படையான நிதி முகாமைத்துவத்தை ஏற்படுத்தவும் புதிய கிரிக்கெட் யாப்பு விதிகளைத் தயாரித்து வருவதாகவும், அவை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த இரான் விக்ரமரட்ன, “கிரிக்கெட்டின் உண்மையான பங்குதாரர்கள் பொதுமக்களே. எனவே புதிய யாப்பு விதிகளை உருவாக்கும் போது பொதுமக்களின் கருத்துகளும் பெறப்படும்” என தெரிவித்தார்.

மேலும், ஜனாதிபதி Anura Kumara Dissanayake அல்லது விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோரிடமிருந்து எந்தவித அழுத்தமும் இல்லையெனவும், தங்களுக்குப் பொறுப்பளிக்கப்பட்ட பணிகளை முழுமையான சுயாதீனத்துடன் முன்னெடுப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் தலைவர் Shammi Silva தலைமையிலான நிர்வாக சபை கடந்த மாதம் பதவி விலகியதைத் தொடர்ந்து, விளையாட்டுத்துறை அமைச்சர் Sunil Kumara Gamage அவர்களால் இந்த நிலைமாறுதல் குழு நியமிக்கப்பட்டது.

வியாழக்கிழமை (20) ஸ்ரீலங்கா கிரிக்கெட் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற முதல் ஊடகவியலாளர் சந்திப்பில் தொழிலதிபர் Prakash Schaffter வரவேற்புரை நிகழ்த்தினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய இரான் விக்ரமரட்ன, இலங்கை கிரிக்கெட்டை மீண்டும் உயர்ந்த நிலைக்கும் வெற்றிப் பாதைக்கும் கொண்டு செல்லக்கூடிய வலுவான அடித்தளத்தை அமைப்பதே தங்களது முக்கிய பொறுப்பாகும் என்றார்.

“நிர்வாக முறைமையில் மாற்றம் கொண்டு வருகிறோம். வெளிப்படையான நிதி முகாமைத்துவத்தை ஏற்படுத்தவுள்ளோம். இது இன்று அல்லது நேற்று தோன்றிய பிரச்சினையல்ல. பல வருடங்களாக நாடு முழுவதும் விவாதிக்கப்பட்ட ஒன்று. பாராளுமன்றத்திலும் கட்சி வேறுபாடின்றி இதுகுறித்து பேசப்பட்டுள்ளது. அனைவரும் மாற்றத்தையே கோரியுள்ளனர்,” என்றார்.

கிரிக்கெட் என்பது ஒரே ஒரு தரப்புக்கோ செயற்குழுவுக்கோ சொந்தமானதல்ல என்றும், அதனால் வீரர்கள், மாவட்டங்கள், மாகாணங்கள், கழகங்கள், பாடசாலைகள், கிரிக்கெட் நிர்வாகிகள் மற்றும் கிரிக்கெட்டின் முன்னேற்றத்தை விரும்பும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமிருந்தும் கருத்துக்கள் பெறப்படும் என்றும் அவர் கூறினார்.

புதிய யாப்பு விதிகள் தயாரிக்கப்பட்ட பின்னர் அவை ஜனாதிபதி சட்டத்தரணிகள் குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும், பின்னர் விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அதேவேளை, “ஒவ்வொரு ரூபாயும் பாடசாலை கிரிக்கெட் மேம்பாட்டிற்காக பயன்படுத்தப்படும். மகளிர் கிரிக்கெட் மற்றும் தேசிய அணியின் முன்னேற்றத்திற்கும் விசேட கவனம் செலுத்தப்படும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கடந்த வார இறுதியில் ஐசிசி பிரதி தலைவர் Imran Khwaja மற்றும் Devajit Saikia ஆகியோர் இலங்கை வருகை தந்து நிலைமாறுதல் குழுவினர், ஜனாதிபதி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருடன் கலந்துரையாடியிருந்தனர்.

இந்த பேச்சுவார்த்தைகள் ஆக்கபூர்வமாகவும் சுமுகமாகவும் நடைபெற்றதாக இரான் விக்ரமரட்ன தெரிவித்தார்.

புதிய யாப்பு விதிகளை உருவாக்கி, புதிய நிர்வாகத்தைத் தேர்தல் மூலம் தேர்வு செய்வதற்கான முழு செயல்முறைக்கும் சுமார் ஆறு மாதங்கள் வரை ஆகக்கூடும் என்றும் அவர் கூறினார்.

மேலும், கிரிக்கெட் நிர்வாகம் முறைப்படுத்தப்பட்ட பிறகு சாதி, இனம், மதம் அல்லது வர்க்க அடிப்படையிலான எந்தவித பேதங்களுக்கும் இடமளிக்கப்படமாட்டாது என்பதையும் அவர் உறுதியளித்தார்.

Related Articles

Back to top button