இலங்கைக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை 10 இலட்சத்தை கடந்தது

இலங்கைக்கு இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வருகை தந்துள்ள சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10 இலட்சத்தை (1 மில்லியன்) கடந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட சாதனை அளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகையை தொடர்ந்து, இந்த ஆண்டிலும் அதே அளவிலான வளர்ச்சி காணப்படுவது நாட்டின் சுற்றுலாத்துறையின் நிலையான முன்னேற்றத்தை வெளிப்படுத்துகிறது.
மத்திய கிழக்கு பிராந்திய மோதல்கள் மற்றும் உலகளாவிய பயண நிச்சயமற்ற நிலைகள் காரணமாக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சிறிதளவு வீழ்ச்சி பதிவான போதிலும், அது உலக சுற்றுலாத்துறையில் ஏற்பட்ட தற்காலிக மந்த நிலையின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது.
அதன்படி, 2026 ஜனவரி 1 முதல் மே 28 வரை இலங்கைக்கு மொத்தம் 1,000,807 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். மே மாதம் 28 வரை மட்டும் 134,530 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
வருகை தந்த நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியம், ரஷ்யா, சீனா மற்றும் ஜெர்மனி முக்கிய சுற்றுலா சந்தைகளாக உள்ளன.
நாட்டின் முக்கிய வெளிநாட்டு அந்நியச் செலாவணி ஈட்டும் துறைகளில் ஒன்றாக சுற்றுலாத்துறை தொடர்ந்தும் வலுவான நிலையைப் பேணுகிறது என்றும், எதிர்வரும் மாதங்களிலும் இந்த வளர்ச்சி தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.




