கொழும்பில் புத்த ரஷ்மி வெசாக் விழா மற்றும் தொடர்புடைய நிகழ்வுகள் ஆரம்பம்

கொழும்பில் நடைபெறும் புத்த ரஷ்மி வெசாக் விழா, கங்காராமய ஆலயத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய கிரிந்தே அஸ்ஸாஜி தேரர் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. திறப்பு விழாவுக்கு பின், கங்காராமய ஆலய வளாகத்தில் நடைபெற்ற தான்சல நிகழ்விலும் பிரதமர் பங்கேற்றார்.
மே 31 ஆம் திகதி பிற்பகலில், பிரதமர் பிலியந்தலையில் உள்ள தர்ம சாஸ்த்ரோதய பிரிவேன ஆலயத்தில் நடைபெற்ற ஸ்ரீ சர்வஜ்ஞ புனித திரு உற்சவ கண்காட்சி ஆரம்ப விழாவில் கலந்து கொண்டார். அங்கு வருகை தந்தபோது, பிரதமர் ஆலய பிரதான பீடாதிபதிக்கு மரியாதை செலுத்தி ஆசீர்வாதம் பெற்றார். பின்னர் தர்ம மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த புனித திரு பொருட்களுக்கு கிலானபச சமர்ப்பித்தார். அதனைத் தொடர்ந்து திரு கண்காட்சி பொதுமக்கள் வணக்கத்திற்காக திறந்து வைக்கப்பட்டது.
மேலும், மதின்னகொடையில் உள்ள ஸ்ரீ சுரம்யராமய ஆலயத்தின் பிரதான பீடாதிபதி வணக்கத்திற்குரிய தோடம்கொல்லே பன்னானந்த தேரர் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட கொட்டிகாவத்தை–முல்லேரியாவ வெசாக் மண்டலம் நிகழ்வும் பிரதமர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில், கொட்டிகாவத்தை–முல்லேரியாவ பிரதேச சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட யாமமஹ பேரஹரா வடிவிலான வெசாக் தோரணத்தை பிரதமர் விளக்கேற்றினார். அதேவேளை, கொலொன்னாவ இளைஞர் புத்த சங்கம் மற்றும் கொலொன்னாவ கிழக்கு–மேற்கு சாசனரக்ஷக மண்டலங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பத்தி கீ இசை நிகழ்வும் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு ஐக்கிய வணிகர் சங்கம் ஆதரவளித்தது.
இந்த நிகழ்வில் மகா சங்கத்தினர், அமைச்சர்கள் வசந்த சமரசிங்க, சுனில் வட்டகல, பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாராச்சி, தூதரக பிரதிநிதிகள், உள்ளூராட்சி அமைப்புகளின் தலைவர்கள், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுத்தந்திரி, அரச அதிகாரிகள் மற்றும் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.




