இலங்கை ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் கடுமையான மருந்து தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதன் காரணமாக, நாட்டின் பொது மற்றும் தனியார் சுகாதாரத் துறைகளில் கடுமையான மருந்து தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுவதாக வைத்திய மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ எச்சரித்துள்ளார்.
மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான செலவு தற்போது பெருமளவில் அதிகரித்துள்ளதாகவும், இதனால் மருந்து இறக்குமதியாளர்களும் சுகாதாரத் துறையினரும் கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
டொலரின் பெறுமதி குறைவாக இருந்த காலத்தில் முன்பதிவு செய்யப்பட்ட மருந்துத் தொகுதிகளை விடுவிப்பதற்கே தற்போது இறக்குமதியாளர்கள் திட்டமிட்டதை விட அதிகளவு ரூபாய் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, புதிய மருந்து கையிருப்புகளை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கான செலவும் மிகவும் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் பல பகுதிகளில் உள்ள மருந்தகங்களில் ஏற்கனவே சில வகை மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுவருவதாகவும் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்தார்.
“இந்த நிலைமை தொடருமானால், 2022ஆம் ஆண்டு நாடு எதிர்கொண்ட கடுமையான மருந்து தட்டுப்பாடு மற்றும் சுகாதார நெருக்கடியைப் போன்ற நிலையை இலங்கை மீண்டும் சந்திக்க நேரிடலாம்” என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உள்நாட்டில் மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான செலவுகள் அதிகரிப்பது திறைசேரிக்கு தாங்க முடியாத நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, எதிர்காலத்தில் உருவாகக்கூடிய இந்த சுகாதார நெருக்கடியைத் தவிர்க்க, மருந்து இறக்குமதிக்கான வரிச் சலுகைகள் மற்றும் பிற நிவாரண நடவடிக்கைகளை உடனடியாக வழங்க திறைசேரி கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.




