உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் விசாரணையை சில அரச அதிகாரிகள் சீர்குலைக்க முயற்சி

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் தற்போதைய அரசாங்கம் சாதகமான போக்கைக் கடைப்பிடித்து வரும் நிலையில், சில அரச அதிகாரிகள் அதனை சீர்குலைக்க முயற்சிப்பதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சுமத்தியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் ஏழாம் ஆண்டு நினைவேந்தல் நிமித்தம் இன்று (21) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் சக்திகள் உள்ளனவா என்ற கேள்வி எழுவதாகத் தெரிவித்த கர்தினால் ஆண்டகை, அவ்வாறு இல்லையெனில் உண்மையைத் தேடும் பயணத்திற்கு ஏன் இவ்வளவு தடைகளை ஏற்படுத்துகிறார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவினால் கூட ஆழமாக ஆராய முடியாமல் போன சில விடயங்கள் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், ‘அபு ஹிந்த்’ என்பவர் யார் என்பதைக் கண்டறிவது முக்கியம் என்றும் கூறினார்.
சஹ்ரானுடன் தொடர்புகளைப் பேணியதாகக் கூறப்படும் அந்த நபர் பற்றிய தகவல்களைத் தேடுவது மிகவும் அவசியமானது என்றும், அபு ஹிந்தின் அடையாளம் குறித்து சி.ஐ.டி விசாரணை நடத்துவதாக ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அப்போதைய அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் நிலாந்த ஜயவர்தனவின் அலைபேசி மற்றும் கணினியில் இருந்த அனைத்து தரவுகளும் அழிக்கப்பட்டுள்ளதாக சாட்சியங்கள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் நிலாந்த ஜயவர்தன வேண்டுமென்றே தாக்குதல் குறித்த உண்மைத் தகவல்களை மறைத்தாரா? அப்படியென்றால் அவர் ஏன் அவ்வாறு செய்தார்? என்றும் கர்தினால் ஆண்டகை இதன்போது கேள்வி எழுப்பினார்.




