EN
Local

தொழில் புரிவோருக்கான உயர்கல்வியில் திறந்த பல்கலைக்கழகத்தின் பங்கு முக்கியமானது – பிரதமர் ஹரிணி அமரசூரிய

தொழில் புரியும் நபர்கள் எப்போது வேண்டுமானாலும் உயர்கல்வியைத் தொடருவதற்கான வாய்ப்பை அரச கட்டமைப்பின் கீழ் வழங்கும் ஒரே பல்கலைக்கழகம் திறந்த பல்கலைக்கழகம் என பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

திறந்த பல்கலைக்கழகத்தின் குருநாகல் பிராந்திய நிலையத்தின் விரிவுரையாளர்கள், நிர்வாக அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகளுடன் 2026 ஜூன் 05 ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

குருநாகல் பிராந்திய நிலையத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் இடவசதியின்மை, விரிவுரை மண்டபங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சுகாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்ட குறைபாடுகளுக்கான நிரந்தரத் தீர்வுகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த பிரதமர், திறந்த பல்கலைக்கழகத்தின் இடவசதிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தேவையான காணி ஏற்கனவே கிடைத்துள்ளதாகவும், அடுத்த கட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்தி நிதி ஒதுக்கீடுகளைப் பெற்று திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும், கல்வித் துறையின் டிஜிட்டல் மயமாக்கல் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2027 ஆம் ஆண்டில் தரம் 2 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கான கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இவ்வாண்டு அறிமுகப்படுத்தப்பட்ட முதலாம் தர கல்விச் சீர்திருத்தத்திற்கான இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணைப் பாடப்புத்தகங்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டிற்கான ஆசிரியர் பயிற்சி நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரதமர் கூறினார்.

ஆசிரியர் வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சைகள் தொடர்பாக அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளதாகவும், அதற்கான பிரச்சினைகளுக்கு இவ்வாண்டிற்குள் தீர்வு வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், அதிபர் சேவையில் நீண்டகாலமாக நிலவி வந்த சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மப்பிரிய திஸாநாயக்க, மக்கள் பிரதிநிதிகள், திறந்த பல்கலைக்கழகத்தின் குருநாகல் பிராந்திய நிலையப் பணிப்பாளர் அனுஷ்க பண்டார, விரிவுரையாளர்கள் மற்றும் பல அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button